டி20 மற்றும் ஒருநாள் தொடருக்காக இலங்கை செல்லும் இந்திய அணி குறித்த பி.சி.சி.ஐ-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகியிருக்கிறது.
ஜூலை 27-ம் தேதி தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது இந்திய அணி. இதையடுத்து ஆகஸ்ட் 2, 4, 7-ம் தேதிகளில் ஒரு நாள் போட்டிகள் நடக்கவிருக்கின்றன. டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் ஒருநாள் தொடரில் மட்டும் விளையாடுகிறார்கள். டி20 தொடருக்கான இந்திய அணிக்கான கேப்டன் மற்றும் துணைக் கேப்டன் தேர்வு கடந்த இரண்டு வாரங்களாக மும்முரமாக நடைபெற்றது. இந்திய அணியின் புதியப் பயிற்சியாளர்களாகப் பொறுப்பேற்றிருக்கும் கவுதம் கம்பீரும் இதில் மும்முரம் காட்டி வந்தார்.
இதையடுத்து டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் , கலீல் அகமது, முகமத் சிராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஒருநாள் தொடருக்கான அணியாக ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சஞ்சு சாம்சன் டி20 தொடரில் மட்டுமே இடம்பெற்றுள்ளார், ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20 போட்டியில் சதம் அடித்த அபிஷேக் சர்மாவும் டி20 அணியில் இடம்பெறவில்லை. மேலும், ருத்து ராஜும் இடம்பெறவில்லை. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்துக் கிண்டலாக தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் இந்திய அணிக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் காங்கிரஸ் எம்.பி சசிதரூர், “இலங்கை செல்லும் இந்திய அணியின் தேர்வு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. கடைசி ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த சஞ்சு சாம்சன் ஒரு நாள் அணியில் இடம் பெறவில்லை. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20 போட்டியில் சதம் அடித்த அபிஷேக் சர்மா டி20 அணியில் இடம்பெறவில்லை.
இந்திய ஜெர்ஸியில் சிறப்பாக விளையாடிய வீரர்களைத் தேர்வாளர்கள் அணிக்கு எடுக்காமல் போவது அபூர்வமான ஒரு நிகழ்வு. இருப்பினும் இந்திய அணி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கை தொடருக்கான இந்திய அணி வீரர்களின் தேர்வு குறித்து உங்களின் கருத்தை கமெண்டில் பதிவிடவும்.