`ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டம் முன்கூட்டியே தெரியும்?’ – பிரபல பெண் தாதா அஞ்சலை கைதும் விசாரணை தகவல்களும்

ஜூலை மாதம் 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கூலிப்படைத் தலைவனாக இருந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரின் மைத்துனர் வழக்கறிஞர் தி.மு.க ஆதரவு அருள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைதான அ.தி.மு.க-வி-லிருந்த வழக்கறிஞர் மலர்கொடி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிகரன் ஆகியோரிடம் விசாரித்தபோது ஆற்காடு சுரேஷின் பெண் தோழியும் பிரபல பெண் தாதா அஞ்சலைக்கும் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டார். கைதான அஞ்சலை வடசென்னை பி.ஜே.பி-யில் மகளிரணியிலிருந்தவர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஞ்சலைக்கு தொடர்பு என தகவல் வெளியானதும் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்தநிலையில்தான் அஞ்சலையை செம்பியம் போலீஸார், நேற்று கைது செய்தனர்.

வழக்கறிஞர் மலர்க்கொடி

இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், “வடசென்னையில் கோலோச்சிய சின்னா என்ற ரௌடியுடன் அஞ்சலைக்கு பிரச்னை ஏற்பட்டது. அதனால் அஞ்சலைக்காக சின்னாவை கொலை செய்தார் ஆற்காடு சுரேஷ். அதன்பிறகுதான் ஆற்காடு சுரேஷ் பிரபல கூலிப்படைத் தலைவனாக உருவானார். அவரின் பெயரைப் பயன்படுத்திய அஞ்சலை, கஞ்சா, கந்து வட்டி பிசினஸில் ஈடுபட்டார். அதனால் அடுத்தடுத்து வழக்குகள் அஞ்சலை மீது பதிவாகி, அவர் புளியந்தோப்பு பி கேட்டகிரி ரௌடியானார். கடந்த 2023-ம் ஆண்டு ஆற்காடு சுரேஷ், பட்டினம்பாக்கம் சர்வீஸ் சாலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அதனால் ஆத்திரமடைந்த சுரேஷின் தம்பி பொன்னை பாலுவும், சுரேஷின் தோழி அஞ்சலையும் பழிக்கு பழிவாங்க காத்திருந்தனர். அப்போதுதான் ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் இருப்பதாக கருதி அஞ்சலையும் பொன்னை பாலும் அவரைத் தீர்த்துக் கட்ட பிளான் போட்டிருக்கிறார்கள். அதனால் ஆம்ஸ்ட்ராங்க்கு எதிரானவர்களுடன் ஒன்று சேர திட்டமிட்ட அஞ்சலையும் பொன்னை பாலுவும் அதற்காக சிலரிடம் பேசினார்கள். அஞ்சலையும் தன்னுடைய பங்குக்கு சில லட்சங்களை கூலிப்படைக்கு கொடுத்து உதவியிருக்கிறார்.

இதையடுத்து ஆற்காடு சுரேஷின் மைத்துனரான தி.மு.க விசுவாசியான வழக்கறிஞர் அருளுடன் அஞ்சலையும் பொன்னை பாலுவும் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். அப்போது அருள், தனக்குத் தெரிந்த அ.தி.மு.க பிரமுகர் தோட்டம் சேகரின் மனைவியான வழக்கறிஞர் மலர்க்கொடியுடன் ஆலோசனை நடத்தினார். இந்த மலர்க்கொடி மீது கொலை வழக்கு உள்பட சில வழக்குகள் உள்ளன. அ.தி.மு.க-விலிருந்த மலர்க்கொடி, ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப்பிறகு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய மலர்க்கொடி, நாட்டு வெடிகுண்டுகளை அளித்ததோடு, பண உதவி செய்ததாகவும் தெரிகிறது. அதுதொடர்பாக விசாரித்துக் கொண்டிருக்கிறோம்.

அஞ்சலை

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதும் அஞ்சலை தலைமறைவாகி விட்டார். அவர் ஓட்டேரியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அங்குச் சென்று அஞ்சலையை நேற்று கைது செய்து விடிய விடிய விசாரணை நடத்தினோம். அப்போது அவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யும் தகவல் தனக்கு முன்கூட்டியே தெரியும் என்று தெரிவித்தார். ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் ஆகியோர் கூறிய சதி திட்டத்துக்கு பண உதவி செய்ததாகவும் அஞ்சலை தெரிவித்தார். அதனால் அஞ்சலைக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று விசாரித்து கொண்டிருக்கிறோம். இந்த வழக்கில் ஏற்கெனவே பிரபல ரௌடி சம்பவ செந்தில் மீது சந்தேகம் உள்ளது. மேலும் சில வழக்கறிஞர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் அவர்களை தேடி வருகிறோம். இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் 16-ம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. அதில் சில அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறதாக உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. அதனால் முன்எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.