இனி ஓடிஐ போட்டியிலும் ஜடேஜா விளையாடவே மாட்டார்… மூன்று முக்கிய காரணங்கள்!

Ravindra Jadeja Future In ODI Cricket: ஐசிசி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி இந்திய அணி சாம்பியனாக வலம் வரும் இந்த வேளையில் பல்வேறு மாறுதல்களை அணியில் நிகழ்ந்து வருகிறது. டி20 உலகக் கோப்பைக்கு பின், இளம் வீரர்கள் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4-1 கணக்கில் டி20 தொடரை  வென்று நாடு திரும்பினர். அதன்பின்னர், தற்போது அனைவரின் கவனமும் இந்தியாவின் இலங்கை சுற்றுப்பயணத்தின் மீது திரும்பி உள்ளது. 

இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், டி20 உலகக் கோப்பைக்கு பின் இந்திய அணி முக்கிய வீரர்கள் மீண்டும் களம் காண்கிறார்கள், தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீருக்கு இதுவே முதல் சுற்றுப்பயணம், டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவின் கேப்டன்ஸி, புதிய காம்பினேஷன்கள் ஆகியவற்றை குறிப்பிடலாம்.

சூர்யகுமார் யாதவே எதிர்காலம்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்தனர். ரோஹித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவர் தலைமையில்தான் இந்திய டி20 அணி இலங்கைக்கு எதிராக விளையாட இருக்கிறது. குறிப்பாக, டி20 உலகக் கோப்பையில் துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவும் இலங்கை அணிக்கு எதிரான டி20 ஸ்குவாடில் இடம்பெற்றாலும் அவருக்கு கேப்டன்ஸி கொடுக்கப்படவில்லை. சூர்யகுமார் யாதவே சர்வதேச அளவில் இந்திய அணிக்கு தொடர்ந்து கேப்டனாக செயல்பட இருக்கிறார் என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

இந்திய ஓடிஐ அணி

டி20 ஒருபுறம் இருக்க, அடுத்தாண்டு தொடக்கத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இருப்பதால் பலரின் கவனமும் இந்திய ஓடிஐ அணியின் மீதும் அதிகம் இருக்கிறது எனலாம். ஓடிஐ அணியில் ரோஹித், விராட், ஜடேஜா, பும்ரா ஆகியோர் விளையாடுவார்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரோஹித் மற்றும் விராட் மட்டுமே இடம்பெற்றிருக்கிறார்கள். ஜடேஜா ஓடிஐ அணியில் இடம்பெறவில்லை. பும்ரா டி20 அணியிலும் இடம்பெறவில்லை. இதன்மூலம், ஜடேஜா, பும்ரா ஆகியோருக்கு டெஸ்ட் தொடருக்காக தேர்வுக்குழு ஓய்வளித்திருக்கிறது என கூறப்படுகிறது. 

ஏனென்றால் செப்டம்பர் முதல் ஜனவரி தொடக்கம் வரை மட்டும் 10 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட இருக்கிறது. அதன்பின் ஜனவரியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஓடிஐ தொடரில் இந்தியா மோத இருக்கிறது, பிப்ரவரி மாதத்தில் சாம்பியன்ஸ் லீக் தொடர் தொடங்கிவிடும். காயமடைவதை தவிர்க்கவும், வேலைப்பளூவை நிர்வகிக்கவும் ஜடேஜா, பும்ரா ஆகியோருக்கு இந்த ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது எனலாம்.

ஓடிஐயிலும் ஜடேஜா கிடையாது!

மறுபுறம், ஜடேஜா இனி ஓடிஐ அணியில் இடம்பிடிக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது. டி20இல் இருந்து அவர் ஓய்வுபெற்றவிட்ட நிலையில், அவரை இனி டெஸ்ட் போட்டியில் மட்டுமே காண முடியும் என்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள். இதற்கு மூன்று முக்கிய விஷயங்களையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். வொயிட் பால் கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே ஜடேஜாவின் பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. 

எனவே, பேட்டிங் ஆர்டரை பலப்படுத்தவும், ஜடேஜாவை போல் இடதுகை ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னரான அக்சர் படேலை அணியில் எடுப்பதன் மூலம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டு விஷயங்களிலும் தீர்வு ஏற்படும். ஜடேஜாவால் அணியில் வெற்றிடமும் ஏற்படாது. மற்றொன்று, அவரின் வயதையும் தேர்வுக்குழுவினர் கருத்தில் கொள்வார்கள் எனலாம். எனவே, இந்த மூன்று விஷயங்களின் மூலமே ஜடேஜா இனி ஓடிஐ போட்டியிலும் விளையாடும் வாய்ப்பு குறைவு என்கின்றனர் வல்லுநர்கள்.

மேஜிக் செய்வாரா ஜடேஜா?

இருப்பினும் அவர் ஓடிஐ அரங்கில் இருந்து இன்னும் அவரது ஓய்வை அறிவிக்கவில்லை. இரு தரப்பு தொடர்களில் தற்போது கவனம் செலுத்தாமல் டெஸ்டில் மட்டும் விளையாட ஜடேஜா திட்டமிட்டிருக்கலாம். எப்படி விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு திடீர் என்ட்ரி கொடுத்து மேஜிக்கை நிகழ்த்தினாரோ அதேபோல் ஜடேஜாவும் ஜனவரி மாதம் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஓடிஐ தொடர், சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் என்ட்ரி கொடுத்து மாயாஜாலத்தை நிகழ்த்தவும் வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.