லக்னோ,
உத்தரபிரதேசத்தில் நடந்த ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய உயர்மட்ட விசாரணை தொடங்கியுள்ளதாக ரெயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.
சண்டிகாரில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகருக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில், உத்தரபிரதேச மாநிலம் கோண்டா அருகே மோதிகஞ்ச்-ஜிலாகி இடையே நேற்று முன்தினம் மதியம் சென்றபோது, அதன் 8 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு மீட்பு படையினர் விரைந்து வந்து, இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனிடையே இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை நேற்று 4 ஆக உயர்ந்தது. மீட்கப்பட்ட உடல்களில் 2 பேர் உடல் அடையாளம் தெரிந்தது. மற்ற இருவரது உடல்களும் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில், திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டதற்கான காரணத்தை கண்டறிய ரெயில்வே பாதுகாப்பு ஆணையத்தில் விசாரணையை தவிர, உயர் மட்ட விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், விபத்து நடந்த இடத்தில் விடிய விடிய சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. சுமார் 800 ரெயில்வே ஊழியர்கள் கொண்ட குழு நேற்றும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். கோண்டா-கோரக்பூர் ரயில் பகுதி முழுவதுமாக மின்மயமாக்கப்பட்ட பாதையாகும். இந்த விபத்தில் மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் முற்றிலும் அழிந்து விட்டதாகவும், அவற்றை மீண்டும் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.