கம்பீர் வந்ததும் வேலைய காண்பிச்சுட்டீங்களே? விளாசிய ஹர்பஜன் சிங்

India vs Srilanka Cricket News Tamil : இந்திய கிரிக்கெட் அணி ஜூலை 27 ஆம் தேதி முதல் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. அதன்பிறகு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளை அண்மையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அண்மையில் வெளியிட்டது. அதில் பல சர்பிரைஸான முடிவுகளை பார்க்க முடிந்தது. டி20 போட்டிகளுக்கான இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராக மட்டுமே அணியில் இடம்பிடித்துள்ளார். டி20 பார்மேட்டில் அண்மையில் ஓய்வை அறிவித்த ரோகித் சர்மா, விராட்  கோலி, ரவீந்திர ஜடேஜா இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. 

இருப்பினும் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் டி20 இந்திய அணியில் இடம்பெறவில்லை. இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சு சாம்சனுக்கு டி20 அணியில் இடம் கொடுக்கப்பட்டிருந்தாலும், ஒருநாள் போட்டிக்கான அணியில் தேர்வு செய்யப்படவில்லை. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இத்தனைக்கும் சிறப்பாக விளையாடி சதமடித்திருந்தார் அவர். ஆனால், சஞ்சு சாம்சனை ஏன் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கவில்லை என்பது பிசிசிஐக்கு மட்டுமே வெளிச்சம். அதுமட்டுமில்லாமல், இந்த தொடரில் இருந்து தான் கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் முழுநேர தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க இருக்கிறார். அதனால் அவரது ஆலோசனையின்பேரிலேயே இந்திய அணியின் தேர்வு இருந்திருக்கும்.

அந்தவகையில் பார்க்கும்போது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் ஓரங்கட்டப்பட்டதற்கு பின்னணியில் கவுதம் காம்பீர் இருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். யுஸ்வேந்திர சாஹல், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் முழுமையாக சேர்க்கப்படவில்லை ஏன் என்பதை புரிந்து கொள்வது கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது சசி தரூர் உள்ளிட்ட கிரிக்கெட்ஆர்வலர்களும் இந்திய அணியின் தேர்வை கடுமையாக விமர்சித்துள்ளனர். குறிப்பாக, சஞ்சு சாம்சன் ஓரங்கட்டப்படுவது குறித்து சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளனர். 

இதேபோல், ருதுராஜ் கெய்க்வாட் 20 ஓவர் இந்திய அணியில் இடம்பெறாததும் வியப்பளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தேர்வுக்குழு தலைவராகவும் இருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். சுப்மன் கில் இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட்டை தாராளமாக தேர்வு செய்திருக்கலாம் என்றும், அபிஷேக் சர்மா கட்டாயம் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா ஏன் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.