மும்பை: இரவு, பகலாய் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மும்பை நகரமே ஸ்தம்பித்துள்ளது. அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனிடையே, கிராண்ட் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் 70 வயது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பைக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நேற்று மும்பையின் மத்திய பகுதியில் சராசரியாக 78 மிமீ மழையும், கிழக்கு மற்றும் மேற்கு மும்பையில் முறையே 57 மிமீ மற்றும் 67 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. இதனால், மும்பையின் பொதுப் போக்குவரத்து சேவைகள் கணிசமாக பாதிக்கப்பட்டன. இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது, இதனால் புறநகர் ரயில் சேவைகள் தாமதமாக 15 முதல் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
ஹார்பர் லைனில் உள்ள சுனாபட்டியில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், ரயில் இயக்கம் மந்தமடைந்துள்ளது. ரயில் இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் மத்திய ரயில்வேயின் பிரதான ரயில் பாதையில் கூடுதல் தாமதம் ஏற்பட்டது. பயணிகளுக்கான முக்கியமான இணைப்பான அந்தேரி சுரங்கப்பாதையில் நீர் தேங்கியதால் மூடப்பட்டது. தொடர் மழையால் சுரங்கப்பாதையில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் மக்கள் சிரமத்தை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று தண்ணீர் சற்று குறைந்ததால், அச்சுரங்கப்பாதை திறக்கப்பட்டது.
தானே மாவட்டத்தில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தானே வந்தனா பஸ் டிப்போ மற்றும் உள்ளூர் மார்க்கெட்டில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. நாக்பூரில் கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் இன்று மூடப்படும் என நாக்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் விபின் இடங்கர் தெரிவித்தார்.
நாக்பூர் விமான நிலையத்தில் விமான அட்டவணைகள் பாதிக்கப்படவில்லை என்றாலும், பிவாண்டி நகரத்தின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. இதனிடையே, சனிக்கிழமையன்று கிராண்ட் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் 70 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 4 பேர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.