சென்னை: மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், திருச்சியில் போட்டியிட்ட மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ 3.13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது கட்சித் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, மதிமுகவின் 31-ம் ஆண்டு தொடக்க விழாவையும், மக்களவைத் தேர்தல் வெற்றியையும் கொண்டாடும் வகையில் கட்சிக் கொடியேற்று விழா நிகழ்ச்சிகளை ஜூலை 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையிலான இரண்டு வார காலம் அமைப்பு ரீதியான மாவட்டங்கள் முதல் கிளை வரையிலான அளவில் ஏற்பாடு செய்ய வேண்டும் என நிர்வாகிளை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டிருந்தார்.
அதன்படி, நிர்வாகிகள் கொடியேற்றும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கட்சியின் பொதுக்குழு தொடர்பான அறிவிப்பை வைகோ இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மதிமுகவின் 30-வது பொதுக்குழு ஆகஸ்ட் 4-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, அண்ணாநகர் 3-வது அவென்யூ-நியூ ஆவடி சாலை சந்திப்பில் இருக்கும் விஜய் ஸ்ரீ மஹாலில் கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெறும்’ எனத் தெரிவித்துள்ளார்.