புதுடெல்லி: மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) தலைவராக இருந்த மனோஜ் சோனி ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் உறுப்பினராக இணைந்த மனோஜ் சோனி, 2023ம் ஆண்டு மே.16-ல் அவ்வாணையத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாகவே மனோஜ் சோனி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடன் சமர்ப்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பராக அறியப்படும் மனோஜ் சோனி, 2017-ல் யுபிஎஸ்சி தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன், குஜராத்தில் உள்ள இரண்டு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக பணியாற்றினார். மகாராஜா சாயஜிராவ் பல்கலைக்கழகத்தில் 2005 முதல் 2008 வரையிலும், பின்னர் பாபாசாஹேப் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2009 முதல் 2015 வரையிலும் மனோஜ் சோனி துணைவேந்தராக பணியாற்றியுள்ளார்.
குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக போலியாக மாற்றுத் திறனாளி சான்றிதழ் கொடுத்ததாக புகாருக்குள்ளான பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா விவகாரத்துக்கும் மனோஜ் சோனி ராஜினாமாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
2029-ம் ஆண்டு வரை மனோஜ் சோனியின் பதவிக்காலம் இருக்கும் நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் உள்ள சுவாமிநாராயண் பிரிவின் ஒரு அங்கமாக விளங்கும் அனுபம் மிஷன் என்ற அமைப்பில் இணைந்து ஆன்மிக சேவையாற்ற அவர் விருபுவதால் தனது யுபிஎஸ்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.