மும்பை: பனாமா நாட்டு சரக்கு கப்பல் ‘மார்ஸ்க் ஃபிராங்க்பர்ட்’. கர்நாடகாவின் கர்வார் பகுதியில் இருந்து 17 மைல் தொலைவில், அரபிக் கடலில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கப்பலின் முன்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து மும்பையில் உள்ள இந்திய கடலோர காவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மீட்பு பணியில் ஈடுபட இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் சாசெட், சுஜீத் மற்றும் சாம்ராட் ஆகியவை அனுப்பப்பட்டன. இந்த கப்பல்கள் விரைந்து சென்று சரக்கு கப்பலில் பரவிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இதனால் கப்பலின் முன்பகுதியில் பற்றிய தீ அணைந்தது. ஆனால், அதிலிருந்து புகை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது. அதன்பின் கப்பலின் நடுப்பகுதியில் மீண்டும் தீப்பற்றியது. இதனால் இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் 12 மணி நேரத்துக்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
கண்காணிப்பு பணி மேற்கொள்ள கடலோர காவல் படையின் டோர்னியர் ரக விமானம், துருவ் ஹெலிகாப்டர் ஆகியவை கோவாவில் இருந்து அனுப்பப்பட்டன. தீ அணைக்கும் பணிக்கு உதவியாக ரசாயன பவுடர் மூடைகளை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்வதற்கான சாத்தியங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் அரபிக் கடல் பகுதியில் ஏற்படும் மாசுவை அகற்ற இந்திய கடலோர காவல் படையின் சிறப்பு கப்பல் சமுத்ர பிரஹாரியும் நேற்று அனுப்பப்பட்டது.