புனே: எதிர்வரும் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று புனேவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் எதிர்க்கட்சி கூட்டணியான மகா விகாஸ் அகாடியை கடுமையாக அவர் விமர்சித்தார். சரத் பவார், உத்தவ் தாக்கரே மற்றும் ராகுல் காந்தியை அவர் விமர்சித்தார்.
“1993 குண்டுவெடிப்புக்கு கருணை கோரியவர்களுடன் உத்தவ் தாக்கரே இணைந்துள்ளார். மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வியை தழுவிய பிறகும் அதை கொண்டாடுவதை முதல் முறையாக நான் பார்க்கிறேன்.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 300 இடங்களில் வென்றுள்ளது. அதில் பாஜக 240 இடங்களை பெற்றுள்ளது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்த போது காங்கிரஸ் கட்சி 240 இடங்களை பெற்றது கிடையாது. மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி தான் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற உள்ளது. அதனை என்னால் கணிக்க முடிகிறது. மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்தபோது மராத்திய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. சரத் பவார் ஆட்சியில் அது மறுக்கப்பட்டது.
இந்திய அரசியலில் மிகப்பெரிய ஊழல்வாதி என்றால் அது சரத் பவார் தான். அதில் எனக்கு எந்த குழப்பமும் இல்லை. ஆனால், நீங்கள் எங்களை ஊழல்வாதிகள் என குற்றம் சுமத்துகிறீர்கள். இந்த பொய்யுரை இந்த முறை பலிக்காது” என அமித் ஷா தெரிவித்தார்.
இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். “அமித் ஷாவின் கருத்தை கேட்டு எனக்கு சிரிப்பு தான் வந்தது. பாஜக தான் சரத் பவாருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியது. இன்று பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளவர்களில் 90 சதவீதம் பேர் ஊழல்வாதிகள். அதனை சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின் பாஜகவிடம் உள்ளது” என சரத் பவாரின் மகளும், எம்.பியுமான சுப்ரியா சுலே தெரிவித்தார்.