புதுடெல்லி: மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் (எம்ஐஎஸ்எஸ்) கீழ் விவசாயிகளின் பயிர்க் கடனை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவதற்கு மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இதுதொடர்பாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு மத்திய அரசு பயிர்க் கடன்களை வழங்கி வருகிறது. வட்டி மானியத் திட்டத்தின் கீழ் இந்தப் பயிர்க் கடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த கடன் தொகை ரூ.3 லட்சமாக உள்ளது. இதை ரூ.5 லட்சமாக உயர்த்துவதற்கு மத்திய வேளாண் அமைச்சகம் தற்போது பரிசீலித்து வருகிறது.
விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டி: இந்தப் பயிர்க் கடன் திட்டம் 2006-07-ல் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது கொண்டுவரப்பட்டதாகும். வட்டி மானியத் திட்டத்தின் 7 சதவீத வட்டியில் கிஸான் கிரெடிட் கார்ட் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கடனையும், வட்டியையும் சரியாகச் செலுத்தும் விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படும்.
இந்நிலையில் மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானை, உத்தரபிரதேச அமைச்சர் சூர்ய பிரதாப் ஷாஹி சந்தித்து இந்த பயிர்க் கடனை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து இந்தத் தொகை விரைவில் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தக் கடன் திட்டமானது, விவசாயிகள் தங்களது பயிர்களை அறுவடை செய்த காலத்துக்குப் பின்னரும் பெறமுடியும். சந்தையில் விவசாய விளைபொருட்களின் விலை குறைவதைத் தடுக்கும் நோக்கில் இந்த கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மத்திய அரசு அறிவிப்பு: உண்மையில் இந்தக் கடன் திட்டமானது 9 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது. இதில் 2 சதவீத வட்டியை மத்திய அரசே செலுத்தி விடுகிறது. மீதமுள்ள 7 சதவீத வட்டியை மட்டுமே விவசாயிகள் செலுத்தவேண்டும். அதே நேரத்தில் கடனையும், வட்டியையும் சரியான நேரத்தில் செலுத்தி முடிக்கும் விவசாயிகள் 4 சதவீத வட்டியைச் செலுத்தினாலே போதும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு விவசாயிகளிடம் பெரும் வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விரைவில் இந்த கடன் திட்டத்துக்கான தொகை உயரவுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
2024-25-ம் நிதியாண்டில் மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் (எம்ஐஎஸ்எஸ்) கீழ்ரூ.22,600 கோடியை மத்திய அரசுகடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.