5,146 தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம்: பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியீடு

சென்னை: அரசுப் பள்ளிகளில் உள்ள 5,146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 2011-12-ம் நிதியாண்டில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் 1,581 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3,565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 5,146 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது.

இந்த தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு காலம் கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெற்றது. இதற்கிடையே தேவை அடிப்படையில் இந்த 5,146 தற்காலிக பணி இடங்களையும் நிரந்தரமாக்க தொடக்கக் கல்வி இயக்குநர் அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.



அதையேற்று நிதித்துறை ஒப்புதலுடன் 10 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக அடிப்படையில் உள்ள 1,581 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3,549 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி அமைக்க ஆணையிடப்படுகிறது. இதில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்படாமல் உள்ள 16 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை புத்தாக்கம் செய்து நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்யவும் உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.