கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், பாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஆனக்கயம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 6-ம் தேதி அந்த மாணவன் தனது வீட்டுக்கு அருகில் ஒரு மரத்தில் இருந்து பழங்கள் பறித்து சாப்பிட்டுள்ளான். அந்த பழங்களை வவ்வால்கள் கடித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த சிறுவனுக்கு கடந்த 10-ம் தேதி காய்ச்சல் பாதித்துள்ளது. காய்ச்சல் வந்ததும் சிறுவன் முதலில் ஒரு டாக்டரிடம் சென்றுள்ளார். அடுத்ததாக தனியார் மருத்துவமனையில் வெளி நோயாளியாக சென்று மருந்து வாங்கியுள்ளார். பின்னர் அதே தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சையில் இருந்துள்ளான். அதில் சிறுவனுக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து கோழிக்கோடு மெடிக்கல் காலேஜில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு நிபா வைரஸ் பாதித்திருப்பதை புனே என்.ஐ.வி நேற்று உறுதிப்படுத்தியது. இந்த நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைபெற்றுவந்த மாணவன் இன்று மரணமடைந்தார். சிறுவன் மரணமடைந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டார்
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், “நிபா வைரஸ் பாதித்த 14 வயது மாணவன் இறந்துள்ளது மிகவும் வருத்தமான செய்தி. கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்துள்ளார். மாணவனை காப்பாற்ற கடும் முயற்சி எடுத்தோம், ஆனால் முடியவில்லை. ஏற்கனவே உள்ள தேசிய அளவிலான விதிமுறைப்படி மாணவனின் உடல் தகனம் செய்யப்படும். மாணவனின் தந்தையும், தந்தையின் சகோதரனும் கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். மஞ்சசேரி மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் ஹைரிஸ்க் கேட்டகிரியில் 4 பேர் அட்மிட் ஆகி உள்ளனர். தொடர்பு லிஸ்டில் உள்ளவர்கள் பயப்படவேண்டாம். மாணவன் கடைசியாக 11-ம் தேதி ஸ்கூலுக்கு சென்றுள்ளார். கடைசி தொடர்புக்கு பிறகு இவ்வளவு நாட்கள் ஆகும் நிலையில் அறிகுறிகள் தென்படாமல் உள்ளது ஆறுதலான விஷயம்” என்றார்.
நிபா வைரஸால் மரணமடைந்த மாணவன் ஃபுட்பால் பிளேயராவார். மாணவனின் வகுப்பறையில் இருந்த சக மாணவர்கள், மாணவன் சென்ற டியூசனில் உள்ளவர்கள், பஸ்ஸில் சென்றவர்கள் ஆகியோர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 246 பேர்கொண்ட பட்டியலில் சுமார் 63 ஹைரிஸ்க் காண்டக்டில் வருகிறார்கள். அதில் 2 பேர் நிபா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நிபா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மஞ்சேரி மெடிக்கல் காலேஜில் 30 வார்டுகள் தனித்தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நிபா வைரஸ் பாதிக்கப்பட்டபோது புனே-வில் இருந்து மொபைல் லேப் கோழிக்கோடுக்கு வந்திருந்தது. அது போன்று இப்போதும் ஒரு மொபைல் லேப் கோழிக்கோடுக்கு வர உள்ளது. வெளவால்கள் மூலம் நிபா வைரஸ் பரவுகிறது. வெளவால்கள் சாப்பிட்ட பழங்கள் உள்ளிட்டவைகளால் வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. காய்ச்சலுடன் தலைவலி, ஜன்னி, இருமல், மூச்சுத்திணறல் ஆகியவை நிபா வைரஸ் பரவலின் அறிகுறியாகும். இதில் ஒரு அறிகுறியோ, ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகளோ தென்படலாம். எனவே, மலப்புறம், கோழிக்கோடு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.