Periyar Vision: “ பெரியார் படத்தை வெளியிட்டால் கலவரம் வெடிக்கும் என்றார்கள்… " – சத்யராஜ்

திராவிடர் கழகத்தின் புதிய முயற்சியாக திராவிட சித்தாந்தத்தை தலைமுறைகள் கடந்து கொண்டு சேர்க்க ‘PERIYAR VISION-Everything for Everyone’ எனும் ஓடிடி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சமூக நீதிக்காக உலகின் முதல் OTT தளமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஓடிடி தளத்தில் சமூக நீதிக் கொள்கைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களை, குறும்படங்களை வெளியிடவுள்ளனர். இதற்கான வெளியீட்டு விழா இன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இவ்விழாவில் தி.க. தலைவர் கி.வீரமணி, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இந்த செயலியைத் தொடங்கி வைத்தனர்.

PERIYAR VISION

இவ்விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், “ஓடிடி தளம் இன்று மிகவும் முக்கியமான ஒன்று. சென்சார் போர்டில் இருக்கும் அளவிற்குப் பிரச்னைகள், கட்டுப்பாடுகள் இதில் இல்லை. ‘பராசக்தி’ படத்தில் ஆரம்பித்து, இப்போது நான் நடித்திருக்கும் ‘சேகுவேரா’ படம் வரை சென்சார் போர்டின் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ‘பராசக்தி’ படத்தின் பல வசனங்களை சென்சார் போர்டில் நீக்கிவிட்டனர். எம்.ஜி.ஆர் அவர்கள் படத்தில் பேசிய திராவிட இயக்க வசனங்களை, பாடலில் இடம்பெற்ற வரிகளை நீக்கினர்.

இதனாலே மக்களுக்குக் கோபம் வந்து, ‘தி.மு.க’ விற்கு பத்து ஓட்டுகள் போட வேண்டிய சூழலில் 100 ஓட்டுகள் போட்டு வெற்றி பெறச் செய்தனர். இளைஞராக இருக்கும்போது இதையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். அன்றிலிருந்து இன்று வரை சென்சார் போர்டில் பிரச்னைகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஓடிடி-யில் இப்போது அந்தப் பிரச்னைகள் குறைவாகத்தான் இருக்கிறது. அதனால், ஓடிடி-யைக் குறைந்தபட்ச சுதந்திரத்துடன் படைப்பாளிகளால் பயன்படுத்த முடிகிறது.

இந்த ஓடிடியைப் பயன்படுத்தி திராவிட சித்தாந்தத்தை, பெரியார் கொள்கையை, சமத்துவ சிந்தனைகளை தலைமுறைகள் கடந்து நாம் எடுத்துச் செல்ல வேண்டும். பெரியாரை, அவரது சமத்துவ சிந்தனையை விஞ்ஞானப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

பெரியாராக நான் நடித்த ‘பெரியார்’ திரைப்படத்தை டிஜிட்டலாக மேம்படுத்தியுள்ளனர். அதை இன்றைய காலகட்டத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும். முதன்முதலில் ‘பெரியார்’ படத்தைத் திரையரங்குகளில் வெளியிடும்போது பிரச்னைகள் வரும், திரையரங்கு முன்பு கலாட்டா நடக்கும், கலவரங்கள் வெடிக்கும், திரையிடவிடமாட்டார்கள் என்றெல்லாம் மிரட்டல்கள் வந்தது. ஆனால், அன்று கலைஞர் ஆட்சியில் இருந்ததால் கலவரக்காரர்கள் பயந்துவிட்டனர்.

PERIYAR VISION

இன்று முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஆட்சி. இப்போது ‘பெரியார்’ படத்தைத் திரையிட்டால் நன்றாக இருக்கும். எதிர்ப்புகளாலே வளர்ந்த இயக்கம் திராவிட இயக்கம். தலைவர் கலைஞரைவிட வேகமானவர் ஸ்டாலின்.” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.