நீலகிரியில் சூறாவளி காற்று: உதகை உள்ளிட்ட 4 வட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

உதகை: சூறாவளி காற்று காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 வட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரத்தால் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வந்தது. மழையுடன் இடைவிடாமல் சூறாவளி காற்று வீசியதால் உதகை குந்தா கூடலூர் பந்தலூர் தாலுகாக்களில், பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது. வீடுகள் இடிந்ததுடன் மண் சரிவுகள் ஏற்பட்டதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் பிற்பகல் முதல் மழையின் தாக்கம் படிப்படியாக குறைந்த நிலையில் நேற்று காலை முதல் மழை பெய்வது முற்றிலுமாக நின்று போனது. அவ்வப்போது வெயிலும் தலை காட்டியது.

ஆனால் சூறாவளி காற்றின் தாக்கம் அதிகரித்தது. இடைவிடாமல் பலத்த காற்று வீசி வருகிறது. அவ்வப்போது சில பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக உதகை குந்தா வட்டங்களில் சூறாவளி காற்று வீசுகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து வருகின்றன. இன்று காலை உதகை எட்டின் சாலையில் ராட்சத மரம் ஒன்று சாலை குறுக்கே விழுந்தது. இந்த மரம் அப்பகுதி உள்ள மின்மாற்றி வீதி விழுந்ததால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதேபோல உதகை கார்டன் மந்து, ஹில்பங்க் பகுதிகளில் மரம் விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. தொடர்ந்து சூறாவளி காற்று வீசுவதால் எந்நேரமும் மரங்கள் விழும் அபாயம் உள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



இந்நிலையில் இன்று சூறாவளி காற்று வீசுவதால், நீலகிரியில் உள்ள 4 வட்டங்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘இன்று 22.07.2024 நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் காரணத்தில் மாணவ மாணவர்களின் நலன் கருத்தில் கொண்டு உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது’’ என்றார்.

இந்நிலையில் அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. ஒரு சில இடங்களில் அதிகளவு மழைப்பொழிவு இருப்பதால், நீரோடைகள் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கைகளை பின்பற்றாததால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இத்தகைய நேரங்களில் உயிரிழப்புகளை தடுக்க பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க, கீழ்கண்ட செயல்பாடுகளை செய்ய வேண்டாம். அதிக மழைப்பொழிவின்போது பொதுமக்கள் நீரோடைகளுக்கு அருகில் செல்லவோ, அருகில் நடக்கவோ கூடாது. ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை தனியாகவோ அல்லது வாகனங்கள் மூலமாகவோ கடக்கக்கூடாது. குழந்தைகளை வெள்ள நீரில் விளையாட அனுமதிக்கக்கூடாது.

அதிக மழைப்பொழிவின் போது நிலச்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், அத்தியாவசியப் பணிகளை தவிர மற்ற நேரங்களில் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். வாகனங்களை மரங்களின் அடியிலோ, தடுப்புச் சுவர்களின் அருகிலோ நிறுத்த வேண்டாம். மேலும், மின்கம்பங்கள் சாயவும் மின்கம்பிகள் அறுந்து விழவும் வாய்ப்புகள் உள்ளதால், மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளை தொடவோ அருகில் செல்லவோ முயற்சிக்கக்கூடாது.

மழை, இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

அதன்படி, உதகை கோட்டம் – 0423-2445577, குன்னூர் கோட்டம் – 0423-2206002, கூடலூர் – 04262-261295, உதகை வட்டம் – 0423-2442433, குன்னூர் – 0423-2206102, கோத்தகிரி – 04266-271718, குந்தா – 0423-2508123, கூடலூர் – 04262-261252, பந்தலூர் – 04262-2120734 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளதால், பொதுமக்கள் எந்தவித அச்சமும் அடைய வேண்டாம்.” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.