அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு ட்ரம்ப் அறிவிக்கப்பட்டிருக்கிறார். பிரச்சாரம் தொடங்கி நடந்துகொண்டிருக்கும் வேளையில் இறுதிகட்டத்தில் போட்டியிலிருந்து விலகுவதாக ஜனநாயகக் கட்சி வேட்பாளராக பைடன் அறிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜோ பைடன் இந்த முடிவு எடுக்க முக்கியமாக இருந்த 3 காரணங்கள் என்னென்ன?
1. ஜோ பைடனின் வயது: “அமெரிக்க அதிபராக நான் பணியாற்றுவது எனது வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கம். இருந்தாலும் நான் தேர்தலில் இருந்து விலகுகிறேன். எஞ்சி உள்ள எனது பதவிக்காலத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவேன்”. இதுதான் போட்டியிலிருந்து விலகிய பின் பைடன் கூறியது.
தேர்தலில் களமிறங்குவதுதான் பைடனின் நோக்கம். ஆனால், அவரின் வயது குறித்து வெளிப்படையாக விமர்சிக்கப்பட்டது. பைடனின் வயது 81. அதனால், அவரால் பரப்புரையை முழுவீச்சில் செய்ய முடியவில்லை என்னும் கருத்து முன்வைக்கப்பட்டது. குறிப்பாக, கடந்த மாதம் ’ட்ரம்ப் – பைடன்’ இடையே நடந்த விவாதத்தில் பைடனின் செயல்பாடுகள் குறிப்பிட்ட அளவில் இல்லை. இது விமர்சனத்துக்குள்ளானது. கட்சிக்குள்ளாகவும் பைடனின் செயல்பாடுகள் விமர்சிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
2. நன்கொடைகள் திரும்பப் பெறப்பட்டன: ’ட்ரம்ப் – பைடன்’ விவாதத்துக்குப் பின் பைடனின் செல்வாக்கு சரிய தொடங்கியது. குறிப்பாக, ஜனநாயகக் கட்சிக்கு கிடைக்கும் நன்கொடைகள் குறைந்தன. கருத்துக் கணிப்புகளும் பைடன் இரண்டாவது முறையாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் வேகமாகக் குறைந்து வருவதாகக் காட்டியது. அதனால், ட்ரம்ப் எதிராக தீவிரமான போட்டியைப் பைடனால் தர முடியாது என எண்ணினர் நன்கொடையாளர்கள். இந்தப் பின்னணியில் தான் நன்கொடையாளர்கள் பின்வாங்கியுள்ளனர். இதுவும் பைடன் பின்வாங்க அழுத்தத்தைக் கொடுத்தது.
3. கமலா ஹாரிஸுக்கு ஆதரவு: இப்படியாக, கட்சிக்குள்ளும் வெளியிலும் பைடனுக்கு எதிராக நிலைப்பாடு அதிகரிக்கவே இறுதிக் கட்டத்தில் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் பைடன். இதனால், தன் உயர்மட்ட ஆலோசகர்களான ஸ்டீவ் ரிச்செட்டி மற்றும் மைக் டோனிலோன் ஆகியோருடன் கலந்தாலோசித்துள்ளார். . தனக்கெதிராக கட்சியினரால் சொல்லப்பட்ட விவரங்கள் என்ன என்பதை முழுமையாக ஆராய்ந்து கட்சியின் நலன் சார்ந்து தேர்தலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளார் பைடன்.
துணை அதிபர் கமலா ஹாரிஸுடன் உரையாடிய பிறகுதான் இந்த முடிவையும் அறிவித்திருக்கிறார் பைடன் என்னும் தகவலும் சொல்லப்பட்டது. கமலாதான் அடுத்த அதிபர் வேட்பாளராக இருப்பார் என்பதை மறைமுகமாக சொல்லும் விதமாகவே ‘கமலா ஹாரிஸை துணை அதிபராக தேர்வு செய்ததுதான் தான் எடுத்த முக்கியமான முடிவு’ எனக் கூறினார் பைடன். எனவே, ஜனநாயகக் கட்சியின் அடுத்த அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் இருக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. வாசிக்க > அமெரிக்க அதிபர் வேட்பாளர் ரேஸில் கமலா ஹாரிஸ் – ஒபாமா நிலைப்பாடு என்ன?