இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, உலகின் நம்பர் 1 தொலைதொடர்பு நிறுவனம் என்ற அந்தஸ்தை எட்டிவிட்டது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உலக அளவில் சீன நிறுவனங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது. டேட்டா பயன்பாட்டில் இதுவரை இருந்துவந்த அனைத்து சாதனைகளையும் முறியடித்து நம்பர் 1 ஆனது எப்படி? விரிவாக தெரிந்துக் கொள்வோம்.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி
ஆசியாவின் பணக்கார தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. டேட்டா பயன்பாட்டைப் பொறுத்தவரை, ஜியோ உலகின் நம்பர் 1 ஆக உள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான இந்த நிறுவனம் டேட்டா பயன்பாட்டில் உலக அளவில் சீன நிறுவனங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது என்ற தகவல், ஜியோவின் காலாண்டு முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், ஜியோ நெட்வொர்க்கில் மொத்தம் 44 எக்ஸாபைட்கள் அதாவது 4400 கோடி ஜிபி டேட்டா செலவிடப்பட்டுள்ளது என்பதை ஜியோவின் காலாண்டு தரவுகள் தெரிவிக்கின்றன.
49 கோடி வாடிக்கையாளர்கள்
டேட்டா உபயோகத்தில் ஜியோ உலகளவில் நம்பர் 1 ஆக உள்ளது என்பது நிறுவனம் வெளியிட்ட தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இது உலகில் உள்ள எந்தவொரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் செலவிட்ட மூன்று மாதங்களுக்கான டேட்டாவின் அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை, சீனாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனங்கள் தான் இந்த சாதனையை வைத்திருந்தன.
ரிலையன்ஸ் ஜியோவுக்கு 49 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதும், கடந்த ஆண்டு மட்டும் 4 கோடி பேர் ஜியோவின் சேவைகளைப் பெறும் வாடிக்கையாளராக இணைந்தனர்.
சீனாவை முந்திய ரிலையன்ஸ்
முன்னதாக இந்த சாதனையை சீன நிறுவனங்களே செய்துவந்தன. ஜியோ பயனர்கள் மாதந்தோறும் சராசரியாக 30.3 ஜிபி டேட்டாவைச் செலவிடுகிறார்கள், அதாவது ஒவ்வொரு நாளும் 1 ஜிபிக்கு மேல் செலவிடுகின்றனர். ஜூன் காலாண்டில் ஜியோவின் டேட்டா பயன்பாடு 32.8 சதவீதம் அதிகரித்து 44 பில்லியன் ஜிகாபைட்களாக உள்ளது என தரவுகள் குறிப்பிடுகின்றன.
கடந்த ஆண்டு இதே காலாண்டில், இந்த எண்ணிக்கை 33.2 பில்லியன் ஜிகாபைட்களாக இருந்தது. சீனாவில் தான் இந்த அளவு டேட்டா பயன்பாடு இருக்கும் என்பதும், இது உலகின் மிகப்பெரிய எண்ணிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜியோவின் 5G பயனர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்துவருவதைக் காட்ட இந்த ஒரு தகவலே போதுமானதாக உள்ளது.
ஜியோவின் தரவு திட்டம்
ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள பல திட்டங்களில் வரம்பற்ற டேட்டா மற்றும் இலவச அழைப்பு ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. நாட்டின் தொலைத்தொடர்பு துறையில் ஜியோ மிக விரைவாக நம்பர் 1 ஆனது. ஜியோவுக்கு உலகம் முழுவதும் சுமார் 49 கோடி பயனர்கள் உள்ளனர் என்பதும், ஜியோவில் தற்போது 13 கோடி 5ஜி பயனர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் டேட்டா பயன்பாட்டில் ஜியோ முன்னிலை வகித்தாலும், 5ஜி சேவையில் சீனாவை விட பின்தங்கியே உள்ளது. முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி ஜியோவின் பொறுப்பை கவனித்து வருகிறார்.