மத்திய கிழக்கு நாடுகள் உட்பட இலங்கைத் தொழிலாளர்கள் அனுப்பப்படும் நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு வரவழைக்கும் புதிய வர்த்தக வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் கவனம் செலுத்தினால், அவர்களுக்குத் தேவையான வசதிகளை சுற்றுலா அமைச்சின் ஊடாக வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
குருணாகல் எபிடோம் ஹோட்டல் வளாகத்தில் நேற்று (21) இடம்பெற்ற “அபிமன் 2024” நிகழ்வில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களைப் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது வழங்கி வைத்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டாண்டு நிறைவடையும் இச்சந்தர்ப்பத்தில் நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அன்று நீங்கள் நாட்டுக்காக பணம் ஈட்டவில்லை என்றால், இன்று நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வர முடியாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒரு கடினமான சூழ்நிலையில் இருந்தோம்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள முடியும் என்று யாரும் நம்பவில்லை. ஆனால் மக்களுடன் இணைந்து இந்த நாட்டை மீட்க முடியும் என்று நான் நம்பினேன். ஏனைய நாடுகளைப் போன்று அன்றி, இரண்டு ஆண்டுகள் நிறைவடைய முன்பே நாட்டை மீட்டெடுத்தோம்.
நாங்கள் கடினமான பயணத்தை கடந்து வந்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நம் நாட்டிற்கு எதிர்காலம் இல்லை என்று பலர் நினைத்தனர். தொழிற்சாலைகளை நடத்த எரிபொருள் இல்லை. சுற்றுலா பயணிகள் யாரும் நாட்டுக்கு வரவில்லை. வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் திட்டத்தை ஆரம்பித்தோம்.
எதிர்காலத்திற்கு முகங்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இப்போது எமக்கு உள்ளது. இதை எப்படி செய்தோம் என்று உலகின் பல நாடுகள் கேட்கின்றன. பங்களாதேசின் கடனை நாம் செலுத்திவிட்டோம். இன்று பங்களாதேசில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நாம் நெருக்கடிக்கு உள்ளான காலங்களில் எங்களுக்கு ஆதரவாக இருந்த அந்த நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என நாம் பிரார்த்தனை செய்கிறோம்.
நாம் இப்போது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். எமது நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும், வெளிநாடு செல்லும் தொழிலாளர்களின் திறன்களை வளர்த்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளிக்க முறையான திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். அப்போது அவர்கள் சிறந்த தொழில் வாய்ப்புகள் மூலம் அதிக வருமானம் பெறலாம்.
02 வருடங்கள் துன்பப்பட்டோம். இரண்டு வருடங்களாக உங்கள் ஆதரவுடன் இந்த நாட்டை முன்னெடுத்துச் சென்றேன். அதன் பலன்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டும். எனவே நாம் அனைவரும் இணைந்து புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். எமது பணியாளர்கள் அனுப்பப்படும் நாடுகளில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை உங்களால் இலங்கைக்கு கொண்டு வர முடியும் என நான் நம்புகிறேன். இன்று, அந்த வாய்ப்பு பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கே செல்கின்றது.
இலங்கைத் தொழிலாளர்களை அந்த நாடுகளுக்கு அனுப்ப முடியுமானால், அந்த நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர முடியும். நீங்கள் சுற்றுலா அமைச்சுடன் இணைந்து இதுகுறித்து நீங்கள் பணியாற்றலாம். அப்போது உங்கள் தொழில்துறை மேலும் விரிவடையும். அந்த நடவடிக்கைகளுக்கு நாங்கள் உங்களுக்கு அரசாங்கமாக ஆதரவை வழங்க முடியும்.
மேலும், அந்த நாடுகளுக்கு அவசியமான உணவு விநியோகத்தை மேற்கொள்ள முடிந்தால், அதற்கு அரச ஆதரவை வழங்க முடியும். நாம் புதிதாக சிந்தித்து புதிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும். ஒரே இடத்தில் தங்கி நிற்க முடியாது. மேலும், நாட்டின் எதிர்கால நிகழ்ச்சி நிரலை தயாரிப்பது அரசியல்வாதிகள் அல்ல என்பதை நினைவுகூர்ந்து, உங்களின் எதிர்கால பணிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார,
‘’அதிகாரப் பேராசையில் சிலர் மக்களை அடக்கி ஒடுக்கிக்கொண்டிருக்கும் வேளையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எவ்வித நிபந்தனையுமின்றி மக்களின் துயரத்திலிருந்து விடுவிக்க முன்வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது அவரது இராஜதந்திரம் தெளிவாகக் எடுத்துக் காட்டப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்குள், நெருக்கடிக்கு உள்ளான மக்கள் இயல்பு நிலையில் வாழக்கூடிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பினார். அவரது பொருளாதார நோக்கிற்கு ஆதரவளிக்கும் வகையில், புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்கள் சம்பாதித்த பணத்தை வங்கிகள் ஊடாக இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். இதன்படி இந்த வருடம் மாத்திரம் 12 பில்லியன் டொலர்கள் அந்நியச் செலாவணியைப் பெற முடிந்தது.
2022 இல் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூட அந்நியச் செலாவணி இல்லாத நாட்டுக்கு, ஜனாதிபதியின் பொருளாதார செயற்திட்டத்தின் மூலம் இன்று சாதாரணமாக இயங்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு நீங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் என்ற வகையில் பெரும் பங்காற்றியுள்ளீர்கள். அதற்கான பாராட்டாகவே இந்த “அபிமன் 2024” உங்களுக்கு முன்வைக்கப்படுகிறது. அன்று உங்கள் பலத்தை நாடு பெறவில்லை என்றால், இன்று நாடு எங்கே இருக்கும் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. எனவே, உங்கள் சக்தியை எமது நாட்டிற்கு அளித்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.’’ என்று தெரிவித்தார்.
வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர்களான ஜகத் புஷ்பகுமார, சாந்த பண்டார, டி.பி. ஹேரத், முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களின் அரசியல் அமைப்புத் தலைவர் லங்கா விஜித குமார, செயலாளர் ஜி. கணேஷ்வரன், பொருளாளர் நிஷாந்த ஜயக்கொடி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் தலைவர்கள், அங்கத்தவர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.