சென்னை: சென்னை பெருநகரப்பகுதியின் (சிஎம்டிஏ) எல்லை விரிவடைந்துள்ள நிலையில் போக்குவரத்து வசதியை மேம்படுத்த ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தை உருவாக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர எல்லையானது கடந்த 2022-ல் 1,189 சதுர கி.மீட்டரில் இருந்து 5,904 சதுர கி.மீட்டராக விரிவாக்கப்பட்டது. இந்நிலையில், விரிவாக்கப்பட்ட சென்னை பெருநகர பகுதிக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தை புதுப்பிக்கும் பணியை, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு (CUMTA) தொடங்கியுள்ளது. ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் என்பது சென்னை பெரு நகரப்பகுதியில் போக்குவரத்து தொடர்பான முன்முயற்சிக்கான கொள்கையாகும்.
ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தின் கீழ் சென்னை பெரு நகரப்பகுதியில் தற்போதைய போக்குவரத்து மற்றும் போக்குவரத்து சூழலை புரிந்து கொள்ள 17 வகையான ஆய்வுகள் மற்றும் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட அனைத்து விவரங்களையும் கருத்தில் கொண்டு சென்னை பெரு நகரப்பகுதிகளில் போக்குவரத்து நிலைக்கேற்ப அடுத்த 30 ஆண்டுகளுக்கு தேவைப்படும் ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் தயாரிக்கப்பட உள்ளது.
சென்னை நகரில் மாநகர பேருந்து சேவைகளை அதிகப்படுத்துவது, புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவது, புறநகர் பகுதிகளில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை அதிகரிப்பது, இணைப்பு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, ஷேர் ஆட்டோகளை முறைப்படுத்துவது தொடர்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணிமனைகளை அதிகரிப்பது, மின்சார பேருந்துகளுக்கு தேவையான சார்ஜிங் வசதிகளை உருவாக்குவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.இந்நிலையில் இதற்கான தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் பட்சத்தில் 8 மாதங்களில் அறிக்கை தயாரிக்கப்படும்.