உத்தரப்பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ஹெட்போனில் பாடல் கேட்டுக்கொண்டிருந்த 2 சிறுவர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் அளித்த தகவலின்படி, உயிரிழந்த சிறுவர்கள் 15 மற்றும் 16 வயதுடைய சமீர், ஜாகீர் அகமது என்று தெரியவந்திருக்கிறது. மேலும், இந்த இருவரும் ராஜ்தேபூரைச் சேர்ந்தவர்களாவர்.
இது குறித்து பேசிய கோட்வாலி காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி தீன்தயாள் பாண்டே, “ஞாயிற்றுக்கிழமை மாலை சிறுவர்கள் ரயில் பாதையில் அமர்ந்தபடி ஹெட்போனில் பாடல் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அவர்கள் அமர்ந்திருந்த தண்டவாளத்தில் திடீரென ரயில் வந்தது. அப்போது ரயில் வருவதை எச்சரிக்கும் வகையில் ஹாரன் அடிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், ஹெட்போன் அணிந்திருந்ததால் அவர்களால் ரயில் ஹாரன் சத்தத்தைக் கேட்க முடியவில்லை. இறுதியில், ரயில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்” என்று தெரிவித்தார். மேலும், சம்பவத்துக்குப் பிறகு சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும், இதில் விசாரணை நடைபெற்றுவருவதாகவும் போலீஸ் அதிகாரி கூறினார்.