புதுடெல்லி: தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை மத்திய அரசு மேம்படுத்த பாடுபட்டு வருகிறது என்று மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துபூர்வமாக பதில்களை அளித்துள்ளார். அதன் விவரம்: தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகிய 6 இந்திய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 2004 அக்டோபர் 12 அன்று தமிழுக்கும், 2005 நவம்பர் 25 அன்று சமஸ்கிருதத்துக்கும், 2008 அக்டோபர் 31 அன்று கன்னடத்திற்கும், 2008 அக்டோபர் 31 அன்று தெலுங்கு மொழிக்கும், 2013 ஆகஸ்ட் 8 அன்று மலையாளத்திற்கும், 2014 மார்ச் 11 அன்று ஒடியா மொழிக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.
செம்மொழிகள் உட்பட இந்திய மொழிகள் அனைத்தையும் மேம்படுத்துவது அரசின் கொள்கையாகும். புதிய கல்விக் கொள்கை 2020, இந்திய மொழிகள் அனைத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம், செம்மொழிகள் உட்பட அனைத்து மொழிகளையும் மேம்படுத்த பாடுபட்டு வருகிறது. செம்மொழி தமிழ் உயராய்வு நிறுவனம் தமிழ் மொழியை மேம்படுத்தி வருகிறது. 3 மத்திய பல்கலைக்கழகங்கள் மூலம் சமஸ்கிருத மொழியை மத்திய அரசு மேம்படுத்துகிறது. சமஸ்கிருத மொழியில் பயிற்றுவிப்பதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும் இந்த 3 பல்கலைக்கழங்களுக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
2014-15 முதல் கடந்த 10 ஆண்டுகளில் செம்மொழிகளுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம்: தமிழுக்கு ரூ.51.76 கோடி, மலையாளத்துக்கு ரூ. 3.71 கோடி, கன்னடத்துக்கு ரூ. 11.46 கோடி, தெலுங்குக்கு ரூ.11.83 கோடி, ஒடியாவுக்கு ரூ.3.81 கோடி
கலை, கலாச்சாரத்தை மேம்படுத்தி, பாதுகாக்க மத்திய அரசு நிதியுதவி: கலை, கலாச்சாரத்தை மேம்படுத்தி, பாதுகாக்க பாடுபட்டு வரும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது. மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள் உட்பட நாடு முழுவதும் கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அயராது பாடுபடும் தகுதிவாய்ந்த கலாச்சார அமைப்புகள் / தனிநபர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
கலாச்சார பாரம்பரிய முக்கியத்துவம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம்: கலாசார பாரம்பரிய முக்கியத்துவம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய கலாச்சார அமைச்சகம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கலாச்சார விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், உலக பாரம்பரிய தினம், உலக பாரம்பரிய வாரம், சர்வதேச அருங்காட்சியக தினம், குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி போன்ற பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களையொட்டி, கண்காட்சிகள், விரிவுரைகள், ஸ்லைடு ஷோக்கள், பயிலரங்குகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பிற நிகழ்ச்சிகள் மூலம் அமைச்சகம் தொடர்ந்து கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவுச் சின்னங்களில் உள்ள காட்சி விளக்க மையங்களில் காணொலிப் படங்கள் காண்பிக்கப்படுகின்றன. சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, அம்பேத்கர் ஜெயந்தி, ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள், வாசிப்பு நாள், சர்வதேச அருங்காட்சியக தினம், ஆசிரியர் தினம் போன்ற முக்கியமான நிகழ்வுகளின் போது, புத்தக கண்காட்சிகள், கண்காட்சிகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு கலாச்சார அமைச்சகம் தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகிறது.
கலைக்கூடங்கள், நூலகங்கள், ஆவணக்காப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் பிரிவு சர்வதேச அருங்காட்சியக கண்காட்சி, நூலகங்களின் திருவிழா மற்றும் இந்திய கலை மற்றும் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை பயிலரங்குகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், மாஸ்டர் வகுப்புகள், நேரடி பயிற்சி போன்றவற்றின் மூலம் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வயது முதிர்ந்த கலைஞர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம்: 60 வயது அதற்கு மேற்பட்ட வயதுடைய, ரூ.72,000-த்திற்கு மிகாத ஆண்டு வருமானம் உடைய கலைஞர்களுக்கு நிதி உதவி அளிப்பதற்காக, “வயது முதிர்ந்த கலைஞர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம்” என்ற பெயரிலான ஒரு திட்டத்தை மத்திய கலாச்சார அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. தேர்ந்தெடுக்கப்படும் கலைஞர்களுக்கு, அதிகபட்சமாக மாதம் ரூ.6,000/- நிதியுதவியாக வழங்கப்பட்டு வருகிறது.
துடிப்புடன் பணியாற்றிய காலத்தில், கலை, எழுத்து உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய அல்லது இன்னும் வழங்கி கொண்டிருந்தாலும், வயது முதிர்ச்சி காரணமாக நிலையான வருமானம் ஈட்ட முடியாத நிலையில் உள்ள, வயது முதிர்ந்த கலைஞர்கள் மற்றும் அறிஞர்களுக்கு நிதியுதவி அளித்து, அவர்களது சமூக – பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.