வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகியுள்ளார். மேலும், தனக்கு பதிலாக துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்ய பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து விவேக் ராமராமி 15 மாதங்களுக்கு முன்பே கணித்தது தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
81 வயதான அதிபர் பைடன் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தடுமாற்றத்துடன் பேசி வந்தார். குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் உடனான முதல் நேரடி விவாதத்தின் போதும் தடுமாறினார். இது அவரது சொந்த கட்சியை சேர்ந்தவர்களையே அதிருப்தி அடைய செய்தது. அதன் காரணமாக அவர் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலக வேண்டுமென சொல்லப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் அதிருப்தியுடன் இருந்தனர். இந்நிலையில், தேர்தலில் இருந்து அவர் விலகி உள்ளார்.
இதற்கிடையே, 18 மாதங்கள் முன்பே, ஜோ பைடன் இம்முறை அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி கணித்தது தெரியவந்துள்ளது. குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அதிபர் தேர்தலில் போட்டியிட்டு, பின்னர் போட்டியில் இருந்து விலகிய விவேக் ராமசாமி, பிரச்சார களத்தில் கடந்த எட்டு மாதங்களாக பைடனின் உடல்நிலையை குறிப்பிட்டு, அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று கூறி வந்தார்.
சில மாதங்கள் முன்பு ஃபாக்ஸ் நியூஸ் உடனான நேர்காணலின் போது, “ஜோ பைடன் தேர்தலில் போட்டியிட மாட்டார். மாறாக, அவருக்குப் பதிலாக கமலா ஹாரிஸ் அல்லது மிச்செல் ஒபாமா ஆகியவர்களில் யாரேனும் ஒருவர் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம்” என்று கூறினார் விவேக் ராமசாமி. அவரின் இந்த கணிப்பை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர் இதற்காக, விவேக் ராமசாமியை மனநலப் பிரச்சினை உள்ளவர் என்றெல்லாம் கூட சொன்னார்கள்.
இந்த நிலையில் தான் விவேக் ராமசாமியின் கணிப்புப்படி, பைடன் தேர்தலில் இருந்து விலகியதை அடுத்து பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். எலான் மஸ்க், “ஆம், அவரது கணிப்புகள் அனைத்தும் உண்மையாகிவிட்டன” என்று பதிவிட்டுள்ளார். இதற்கிடையே, விவேக் ராமசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தனது கணிப்பு வீடியோக்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
விவேக் ராமசாமி: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 38 வயதாகும் விவேக் ராமசாமி ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் பட்டம்பெற்ற அவர், தற்போது அமெரிக்காவில் தொழில்முனைவோராக உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக முயற்சித்தார்.
அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இருக்கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் அயோவா மாகாண தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் இருந்து விவேக் ராமசாமி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.