கோவை,
கோவை பி.ஆர்.எஸ். பயிற்சி பள்ளி வளாகத்தில் கோவை ரைபிள் சங்கம் சார்பில் 49-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 15-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அதில் நேற்று வரை ரைபிள் பிரிவு போட்டிகள் நடைபெற்றன. இன்று (திங்கட்கிழமை) முதல் 26-ந் தேதி வரை பிஸ்டல் பிரிவு போட்டிகள் நடைபெற உள்ளன.
ஏர் ரைபிள் 50 மீட்டர், பிஸ்டல் 25 மீட்டர் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,650 பேர் பங்கேற்றனர். 15-ந் தேதி முதல் நேற்று வரை நடந்த ரைபிள் பிரிவு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மதுரை ரைபிள் கிளப்பை சேர்ந்த வீராங்கனை மெல்வீனா ஏஞ்சலின் (18 வயது) என்பவர் 50 மீட்டர் ரைபிள், 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆகிய பிரிவுகளில் பங்கேற்று அதிகபட்சமாக 11 தங்கப்பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் என 12 பதக்கங்களை வென்று அசத்தினார்.
இது குறித்து அவர் கூறும்போது, நான் கடந்த 6 ஆண்டுகளாக பயிற்சி எடுத்து வருகிறேன். வேலு சங்கர் என்ற பயிற்சியாளர் எனக்கு நல்ல முறையில் பயிற்சி அளித்து வருகிறார். நான் தேசிய அளவில், உலக அளவில் பங்கேற்று 75-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று உள்ளேன் என்றார்.
கோவை ரைபிள் கிளப்பை சேர்ந்த இலக்கியா 6 பதக்கங்களும், சுதீஷ்னா 5 பதக்கங்களும் பெற்றனர். கோவை விமானப்படை நிர்வாகக் கல்லூரி ஏர் கமாண்டன்ட் விகாஸ் வகி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டினர். இதில் 600 பேருக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.