சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்கு வார நாட்களைப் பிரித்துத் தந்தார் பிரம்மா. ராகு கேதுக்களான சாயா கிரகங்களை அதில் சேர்க்கவில்லை. ராகுவும் கேதுவும் தவம் செய்து பிரம்மனை தரிசித்தனர்.
நவக்கிரகங்களில் இடம்பெற்ற தங்களுக்கு வார நாட்கள் ஏன் ஒதுக்கப்படவில்லை என்று கேட்டனர். வாரம் என்பதை ஒன்பது நாட்கள் என நிர்ணயித்து தங்களுக்கும் இரண்டு நாட்களை ஒதுக்கி, ஆதிக்கம் செலுத்தும் அதிகாரத்தைத் தரும்படிக் கேட்டனர்.
அதற்கு பிரம்மன், ‘நீங்கள் இருவரும் இரண்டு கிரகங்கள் அல்ல. ஒரே கிரகம்தான். ஒரு நாளை உங்களுக்காக ஒதுக்கினால் வார நாட்கள் எட்டாகும். இது காலக் கணக்கில் சிக்கலை உண்டாக்கும். எனவே, உங்கள் விருப்பத்தை வேறு விதமாகப் பூர்த்தி செய்கிறேன்’’ என்று கூறி, ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட நேரத்தை (ஒன்றரை மணி நேரத்தை ராகுவுக்கும், ஒன்றரை மணி நேரத்தைக் கேதுவுக்கும்) அவர்களுக்குக் கொடுத்து அருள்புரிந்தார்.
ஒவ்வொரு நாளும் ராகு காலம் எப்போது, கேது காலம் எப்போது என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும். கேதுவின் காலத்தைதான் எமகண்டம் என்று குறிப்பிடுகிறார்கள். அதனால், அது எமனுக்குரிய காலம் என்றும், அதில் ஆபத்துகள் நேரும் என்றும் தவறாக எண்ண வேண்டியதில்லை.
ஜாதகத்தில் ராகு, கேது என்பது சர்ப்பங் களுக்குச் சம்பந்தப்பட்டவை என்பதால், இந்தக் கிரகங்களுக்குரிய காலம் விஷ காலமாக கருதப்படுகிறது. ஆகவே, சுபகாரியங்களுக்கு ஏற்ற காலமாக கருதப்படவில்லை.
ராகு, கேது என்பது தலையும் உடலும் மாறி நிற்கும் கிரகங்கள். அதாவது ‘அரூபி’ என்பார்கள். இவற்றின் இந்தத் தன்மை மனதில் சலனத்தயும் செயலில் தடங்கலையும் தரும் என்பது நம்பிக்கை.
ராகு, கேதுவால் ஏற்படக்கூடிய சூரிய, சந்திர கிரகண காலங்களிலும் ஆத்மா மனம் தொடர்பான செயல்பாடுகளில் சுணக்கம் உண்டாகும் எனச் சுட்டிக்காட்டுகின்றன ஞான நூல்கள். அப்படியே ராகுகாலம் எமகண்ட வேளையிலும் சுணக்கம் உருவாகும் என்பது, பெரியோர்கள் அனுபவத்தால் கண்டு சொன்ன உண்மை. ஆகவே, ராகுகாலம் மற்றும் எமகண்டம் பொழுதுகளைச் சுபகாரியங்களுக்கு ஒதுக்கி வைக்கும்படி சொன்னார்கள்.
ராகு காலத்தில் புதிய காரியங்களைத் தொடங்கக்கூடாது என்றும், திருமணம் போன்ற சுபகாரியங்களின் முகூர்த்தத்தை வைக்கக் கூடாது என்றும் சாஸ்திரம் கூறுகிறது. மற்றபடி நமது தினசரிக் கடமைகளைச் செய்யவும், கர்மாக்களைச் செய்யவும் ராகு காலம், எமகண்டம் ஒரு தடையில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.