“என் ரெண்டு மகளையும் படிக்க வைக்க கஷ்டப்படுறேன்!” – `மாயாண்டி குடும்பத்தார்’ ராசு மதுரவன் மனைவி’ என்கிற தலைப்பில் இயக்குநர் ராசு மதுரவன் குடும்பத்தினர் வறுமையில் தத்தளித்துக்கொண்டிருப்பது குறித்து விகடனில் வெளியான கட்டுரை, வாசகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் இதயத்தை துடிதுடிக்க வைத்ததோடு, உதவிக்கரத்தையும் நீட்ட வைத்திருக்கிறது.
வேதனையோடு கண்கலங்கிய ராசு மதுரவனின் மனைவி பவானியின் பேட்டியை விகடனில் படித்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் உதவியிருப்பது நெஞ்சம் நெகிழவைத்திருக்கிறது.
அண்ணன் – தம்பி பாசம், குடும்ப உறவுகள் குறித்த படம் என்றாலே இயக்குநர் ராசு மதுரவனின் ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘முத்துக்கு முத்தாக’ படங்கள் நினைவுக்கு வந்து கலங்கடித்து இதயத்தைக் கனக்க வைத்துவிடும். இப்படி, பாராட்டுகளையும் வரவேற்பையும் குவித்த இயக்குநர் ராசு மதுரவன், புற்றுநோயால் இறந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜூலை 9 அவரின் நினைவுநாளையொட்டி, அவரது மனைவி பவானியிடம் பேசியபோதுதான் அவரது குடும்பச்சூழல் கதிகலங்கவைத்தது.
எங்க வாழ்க்கையே தினந்தினம் போராட்டத்துலதான் ஓடிக்கிட்டிருக்கு. அவரோட இயக்கத்துல எத்தனையோ பேர் நடிச்சிருக்காங்க. ஆனா, யாருமே எங்களைத் தொடர்புகொண்டு எப்படி இருக்கீங்கன்னு நலம்கூட விசாரிக்கல. நானும் இல்லைன்னா என் மகள்களோட நிலைமையை நினைச்சுக்கூடப் பார்க்க முடியல” என கண் கலங்க வைத்த அவரது பேட்டிக்குப் பிறகுதான் பலரும் உதவ ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், விகடன் பேட்டியைப் படித்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் இரண்டு மகள்களுக்கும் இந்த வருடத்திற்கான கல்விக் கட்டணம் சுமார் 1 லட்சம் ரூபாய்யைச் செலுத்தி உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். இதுகுறித்து நம்மிடம் பேசிய ராசு மதுரவனின் மனைவி பவானி, “இத்தனை நாட்கள் நாங்க எங்க இருந்தோம், என்ன பண்ணினோம்னு யாருமே கண்டுக்கல. என் கணவர் படத்துல அத்தனை நடிகர்கள், அத்தனை இயக்குநர்கள் நடிச்சிருக்காங்க. இதுவரைக்கும் எங்கக்கிட்ட யாரும் பேசினது கிடையாது. ஆனா, விகடன் தான் எங்களை தேடி பிடிச்சு நாங்க எப்படி இருக்கோம்?னு கேட்டது. எங்களோட நிலமையைக் கேட்டதுக்காகவே விகடனுக்கு பெரிய நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன். என் மூத்த பொண்ணு பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறா, ரெண்டாவது பொண்ணு பத்தாவது படிக்கிறா.
விகடனில் வந்த செய்தியை படிச்சுட்டு சிவகார்த்திகேயன் சார், என்னோட ரெண்டு பிள்ளைகளுக்குமான இந்த வருட ஸ்கூல் ஃபீஸ் 97,000 ரூபாயைக் கட்டினார். அவருக்கும் என் கணவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என் கணவரோட இயக்கத்துலகூட அவர் நடிச்சதுமில்ல. ஆனா, விகடனில் வெளியான கட்டுரையை படிச்சுட்டு எங்களோட நிலைமையையும் கஷ்டத்தையும் புரிஞ்சுக்கிட்டு இப்படியொரு ஒரு உதவியைச் செஞ்சது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. என்னை தொடர்புகொண்ட சிவகார்த்திகேயன் சாரோட நற்பணி மன்றத் தலைவர் மோகன்தாஸ் சார், ‘சிவகார்த்திகேயன் சார் இன்னும் ரெண்டு நாளில் உங்கக்கிட்ட பேசுவார்ன்னும் சொன்னார்.
அதேமாதிரி, திருச்சியைச் சேர்ந்த விகடன் வாசகர் வரதராஜன் கண்ணன் சார் விகடன் கட்டுரையை படிச்சுட்டு 30,000 ரூபாயை அனுப்பி வெச்சிருக்கார். இன்னும் பிள்ளைங்களுக்கு படிக்கிறதுக்கான உதவியையும் செய்யுறதா சொல்லியிருக்காரு. என் கணவர் இப்போ உயிரோட இல்லைன்னாலும் இந்த உதவிகளை எல்லாம் பார்த்துக்கிட்டுத்தான் இருப்பார். எந்த சம்மந்தமும் இல்லாம எங்க குடும்பத்துக்காக உதவின சிவகார்த்திகேயன் சார், திருச்சி வரதராஜன் சார் ஆகியோரின் குடும்பங்களும் நல்லா இருக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன். இன்னும் நிறைய பேரு போன் பண்ணியும் பேசிக்கிட்டிருக்காங்க. விகடனாலதான் இவ்வளவு உதவியும் கிடைச்சிருக்கு. ரொம்ப சந்தோஷம், ரொம்ப நன்றி” என்றார் நெகிழ்ச்சியுடன். விகடனின் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.