இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கை உடனான டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி ருத்துராஜ், அபிஷேக் சர்மா போன்ற வீரர்கள் இடம்பெறவில்லை. இவை அனைத்தும் சர்ச்சையைக் கிளப்பியிருந்த நிலையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இதற்கு விளக்கமளித்தனர்.
இது தொடர்பாகப் பேசிய அகர்கர், “இலங்கைக்கு எதிரான டி20 அணியில் இடம்பெறாத வீரர்கள் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் எங்களால் 15 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும். உதாரணத்திற்கு டி20 உலகக்கோப்பைக்கு முந்தையப் போட்டிகளில் ரிங்கு சிங் நன்றாக விளையாடியிருந்தாலும் அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லையே…” என்று கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜடேஜா இடம்பெறாதது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அஜித் அகர்கர், “அணியிலிருந்து ரவீந்திர ஜடேஜா டிராப் செய்யப்படவில்லை. அவர் எங்களுக்கு மிகவும் முக்கியமான வீரர். அடுத்து வரவிருக்கும் டெஸ்ட் சீசனுக்கு அவர் உறுதுணையாக இருப்பார்” என்றார்.
பிறகு ஹர்திக் பாண்டியா கேப்டானாக நியமிக்கப்படாதது குறித்துப் பேசிய அவர், “ஹர்திக் மிகவும் முக்கியமான வீரர். அவரின் திறமை தனித்துவமாக இருந்தாலும், அவரின் ஃபிட்னஸ்தான் சவாலாக இருக்கிறது. எல்லா நேரத்திலும் விளையாடத் தகுந்த கேப்டன் இந்திய அணிக்கு வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் சூர்யகுமார் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்துப் பேசிய அகர்கர், “கேப்டன் பொறுப்புக்கு சூர்யகுமார் யாதவ் முற்றிலும் தகுதியானவர். அவருக்குச் சிறந்த கிரிக்கெட் மூளை இருக்கிறது. உலகிலேயே சிறந்த டி20 கிரிக்கெட் வீரர்களில் அவரும் ஒருவர். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடக் கூடியவர். அவரிடம் நிறையத் திறமைகள் உள்ளன” என்று கூறியிருக்கிறார்.