நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பேண்ட் லைன் பகுதியைச் சேர்ந்தவர் தம்பா. ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். ஊட்டி நகரில் உலவும் நாய்கள் கூட்டமாக இவரது ஆடுகளை அவ்வப்போது கடித்து வந்துள்ளன. நாய்களால் ஆடுகளுக்கு காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டு வந்திருக்கிறது. இறந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் பராமரிப்பாளர்கள் இல்லாத நாய்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
ஆனால், நகராட்சி நிர்வாகம் அலட்சியமாகவே செயல்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அவரது ஆடு ஒன்றை நாய்கள் கடித்து குதறியுள்ளன. இதில் ஆடு உயிரிழந்திருக்கிறது. உரிய நிவாரணம் மற்றும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இறந்த ஆட்டை ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார் தம்பா. கோரிக்கை மனுவும் அளித்திருக்கிறார்.
இது குறித்து தெரிவித்த தம்பா, “நான் பல ஆண்டுகளாக ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு உள்ளேன். ஊட்டி நகராட்சி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி வருகின்றன. கடந்த சில நாட்களாக நாய்கள் ஒன்றிணைந்து ஆடு உள்ளிட்ட கால்நடைகளை கடித்து குதறுகின்றன. ஊட்டி கமர்சியல் சாலை பின்புறம் உள்ள பேண்ட் லைன் பகுதியில் மட்டும் இதுவரை 30 ஆடுகள் இறந்துள்ளன. பல ஆடுகள் காயமடைந்துள்ளன.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் மிகவும் அலட்சியமாகவே பதிலளிக்கின்றனர். பராமரிப்பாளர்கள் இல்லாத நாய்களைக் கட்டுப்படுத்தி, இறந்த ஆடுகளின் உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.