“அதிமுக ஆட்சியில் உதய் மின் திட்டத்தில் சேர்ந்ததுதான் மின் கட்டண உயர்வுக்கு காரணம்” – அமைச்சர் தங்கம் தென்னரசு 

சென்னை: “அதிமுக ஆட்சியில் இருந்தபோது, உதய் மின் திட்டத்தில் சேர்ந்ததுதான் மின் கட்டண உயர்வுக்கு காரணம். அதிமுக பற்றவைத்த நெருப்புதான் இன்று பரவ காரணம். அதனை தடுத்து சீரமைக்கும் நடவடிக்கையை திமுக அரசு செய்து வருகிறது,” என்று தமிழக நிதி மற்றும் மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் தமிழக நிதி மற்றும் மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “மின்கட்டண உயர்வு தொடர்பாக, அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது, வேடிக்கையாக இருக்கிறது. பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் அவர்களது நடவடிக்கை இருக்கிறது.

மின்கட்டண உயர்வுக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் அதிமுகவினர்தான். உதய் மின்திட்டத்தில் அனைத்து மாநிலமும் இணைய வேண்டும் என அப்போதைய மத்திய அரசு சொன்னபோது, அப்போதை தமிழக முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக மறுத்தார். திமுகவும் எதிர்த்தது. ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நிலையில், அன்றைய முதல்வராக இருந்த ஒ.பன்னீர்செல்வம் மேலே இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக உதய்மின் திட்டத்தில் இணைத்தார்.



கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய மின்துறை அமைச்சர் கையெழுத்து போட்டு இந்த திட்டத்தில் இணைத்து கொண்டார். இது, ஆண்டுதோறும் மின் கட்டண உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டது. இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தில் முக்கிய சரத்து என்னவென்றால் ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வை தமிழக அரசு செயல்படுத்த வேண்டிய உத்தரவாதத்தை அளித்தது அன்றைய அதிமுக அரசு.

கடந்த 2011- 12-ம் ஆண்டு வரை, திமுக ஆட்சியில் இருந்தபோது, மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு ஒட்டு மொத்த நிதி இழப்பு 18 ஆயிரத்து 954 கோடி ரூபாய் ஆக இருந்தது.பின்னர் 10 ஆண்டுகால திறனற்ற அதிமுக ஆட்சியில் இந்த செலவு, 94 ஆயிரத்து 312 கோடி ரூபாய் ஆக அதிகரித்ததுடன், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்கும் முன்பு வரை, 1 லட்சத்து 13 ஆயிரத்து 266 கோடி ரூபாய் ஆக தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டு மொத்த நிதி இழப்பு அதிகரித்தது. இதற்கு காரணம் யார்? அதிமுக அரசுதான்.

பின்பு திமுக ஆட்சிக்கு வந்த பின்பு நிதி இழப்பினை அரசே ஏற்றுக் கொண்டு உள்ளது. இந்த நிதி இழப்பை முந்தைய அரசு வழங்காத காரணத்தால், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கான கடன், 43 ஆயிரத்து 493 கோடி ரூபாய் ஆக இருந்தது. இது, அதிமுக ஆட்சியின் பத்து ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்து, 2021 திமுக ஆட்சி பொறுப்புக்கு வருவதற்கு முன்பு, கடன் மட்டும், 1 லட்சத்து 59 ஆயிரத்து 823 கோடி ரூபாய் ஆக வந்திருக்கிறது.

இந்த கடனுக்கு வட்டி கட்ட வேண்டும். வட்டியை பொறுத்தவரை, 2011 திமுக ஆட்சியில் இருக்கும் வரை, 4,588 கோடி ரூபாய் ஆக இருந்தது. பின்பு 259 சதவீதம் ஆக அதிமுக ஆட்சியில் கூடியது. அதன்படி வட்டி மட்டும் 2021-ல் 16,511 கோடி ரூபாய் ஆக வந்திருக்கிறது. இந்தச் சூழலில் தான், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி நிலைமையை மோசமாக வைத்து விட்டு சென்றார்கள். இந்த இழப்புகளை சரி கட்டதான் தற்போதைய மின் கட்டண உயர்வு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

1 கோடி பேருக்கு மின் கட்டண உயர்வு வராது. குறைந்த அளவில் தான் மின் கட்டண உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கையில், மிக குறைவான அளவில் மின் கட்டண நிர்ணயம் தமிழகத்தில் மட்டும்தான். அதிமுக ஆட்சியில் 2012, 13, 14-ம் ஆண்டுகளில் முறையே 3.7, 3.57, 16.33 சதவீதம் என மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதையெல்லாம் மறைத்து விட்டு மக்களை ஏமாற்றும் வகையில் அதிமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

இன்று மின்வாரிய நிதிநிலை நெருக்கடியை சமாளிக்கும் வகையில், தமிழக அரசு, பங்கு மூலதனம், மின்கட்டண மானியம், கடன் உதவிகள் என வழங்கி கொண்டு வருகிறது. வருவாய் இழப்பை சரி செய்யும் வகையிலும் அரசு மானியம் வழங்கி வருகிறது. இதற்காக மட்டும் 32 ஆயிரத்து104 கோடி ரூபாய் தமிழக அரசு மின்சார வாரியத்துக்கு வழங்கி இருக்கிறது. கடந்த நிதியாண்டில் மின்வாரிய நட்டத்தை பொறுத்தவரை 23- 24-ல் 3,429 கோடி ரூபாய் ஆக குறைந்துள்ளது இது அரசின் சீரமைப்பு நடவடிக்கை. மின்சார வாரியத்துடன் நிதி ஆதாரங்களை உயர்த்தக்கூடிய பல்வேறு நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது.

செலவுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நிதிநிலைகளின் படி,1 -7 -2023 அன்று, நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணின் படி, அனைத்து மின் இணைப்புக்கு உயர்த்த வேண்டிய 4.7 சதவீத கட்டண உயர்வுக்கு பதிலாக அன்றைய கட்டண உயர்வாக 2.18 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டது. இதில் கூட, வீடுகளுக்கான கட்டண உயர்வை அரசே ஏற்றது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

2024 ஜூலை மாதத்தை பொறுத்தவரை, 2023 ஏப்ரல் மாத்தின் விலை குறியீட்டு எண் 178.1 மற்றும் 2024 ஏப்ரலில் விலை குறியீட்டு எண் 186.7 என கணக்கீட்டால், தற்போது வெறும், 4.83 சதவீதம் மட்டுமே மின் கட்டணம் உயர்ந்துள்ளது. ஆனால் மின் கட்டண உயர்வால் 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் மின்வாரியத்துக்கு வந்து விட்டதாக சில அரசியல் கட்சியினர் கூறுகின்றனர். அது உண்மையல்ல. மின் கட்டண உயர்வால், 2280 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் அதிகரிக்கிறது, தமிழ்நாடு அரசின் மானியமும் 500 கோடி ரூபாய் ஆக வந்திருக்கிறது.

எனவே, அதிமுக ஆட்சியில் இருந்த போது, உதய் மின் திட்டத்தில் சேர்ந்ததுதான் இதற்கு காரணம். அதிமுக பற்ற வைத்த நெருப்புதான் இன்று பரவ காரணம். அதனை தடுத்து சீரமைக்கும் நடவடிக்கையை திமுக அரசு செய்து வருகிறது. ஸ்மார்ட் மீட்டர் தேவையாக இருக்கிறது. அதன் கொள்முதல் தொடர்பாக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. வந்துள்ள விலைபுள்ளிகளை கொண்டு பரிசிலீத்து வருகிறோம். ஒப்பந்தம் இறுதி செய்த பின்பு, ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் முடிந்து, நுகர்வோருக்கு பொறுத்தப்பட்டு பின்பு, இந்த கணக்கீடு முறை அமலுக்கு வரும். கணக்கீட்டில் தவறு நடந்தால் தெரியப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

நிலக்கரி இறக்குமதி முறைகேடு அதிமுக ஆட்சியில்தான். ஆகையால் கொள்முதலில் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மத்திய பட்ஜெட்டை பொறுத்தவரை, தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களுக்கு நிதியை அள்ளி வழங்கி இருக்கிறார்கள். நமது முதல்வரின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இந்த பட்ஜெட் தமிழக மக்களை வஞ்சித்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.