புதுடெல்லி: தங்களது தவறுக்கான தண்டணைக் காலம் முடிந்தும், அபராதம் கட்ட முடியாமல் பல ஏழைக் கைதிகள் சிறையில் வாடுகின்றனர். இதுபோன்றவர்களுக்கு உதவ மத்திய அரசு ரூ.20 கோடியை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் தெரிந்தோ, தெரியாமலோ பலர் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் கைது செய்யப்பட்டு சிறை தண்டனைக்கு உள்ளாவதும் வழக்கமாக உள்ளது. இதற்கான நீதிமன்ற வழக்குகளின் போது அக்கைதிகளுக்கு நீதிபதிகள் தண்டனை அளிப்பதுடன் குறிப்பிட்ட தொகைகளை அபராதங்களாகவும் விதிப்பது உண்டு.
இந்த அபராதங்கள் சில ஆயிரங்கள் முதல் பல லட்சம் ரூபாய் வரை விதிக்கப்படுகின்றன. இதனால், கைதிகள் தங்கள் சிறைத் தண்டனை காலத்தை கடந்தாலும் தமக்கு விதிக்கப்பட்ட அபராதங்களை செலுத்த முடிவதில்லை. இன்னும் பலர் தமது குற்றங்களுக்கான வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெறும் நிலையில் பெயில் பெறுகின்றனர். ஆனால், இந்த பெயில் தொகைகளையும் கட்ட முடியாமல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.
இதன் காரணமாக, நாடு முழுவதிலும் பலர் தண்டனை முடிந்தும் விடுதலை பெற முடியாமல் சிறைகளில் தொடர்கிறார்கள். இந்த எண்ணிக்கையும் வருடந்தோறும் கூடுவதாகவும் கருதப்படுகிறது. இப்பிரச்சனையை மனதில் கொண்டு மத்திய அரசு இந்த வருடம் பொது பட்ஜெட்டில் ஒரு தீர்வை காண முயற்சித்துள்ளது. இதுபோல் விடுதலை பெற்ற கைதிகளின் அபராதத் தொகையை அரசு மூலம் செலுத்த முன்வந்துள்ளது.
இதற்காக, இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் ரூ.20 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். இந்த தொகை கடனா அல்லது மானியமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனினும், ஏதாவது ஒரு வழியில் கிடைக்கும் இந்த அபராதத் தொகை உதவியால் நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான ஆண், பெண் கைதிகள் பலனடைய உள்ளனர். இதில் ஏழைக் கைதிகள் அரசு சார்பில் அடையாளம் காணப்பட உள்ளனர். இத்துடன் நாட்டின் சிறைகளை நவீனப்படுத்தவும், விரிவாக்கவும் ரூ.300 கோடியும் பொது பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
காவல் துறையினருக்கு ரூ.520 கோடி: இதேபோல், நாட்டின் அனைத்து மாநிலக் காவல் துறைக்காக மத்திய அரசின் நிதியாக ரூ.520 கோடியும் இன்று தாக்கலான பொது பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் அனைத்து மாநிலக் காவல் துறைகளுக்கான ஆயுதங்கள், அலுவலகம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொள்ளலாம்.
கடந்த வருடம் இந்த தொகையானது வெறும் ரூ.221 கோடியாக இருந்தது. இதை இரு மடங்காக உயர்த்திய மத்திய அரசு, நடப்பு ஆண்டிற்காக ரூ.520 கோடியை ஒதுக்கியுள்ளது.