ஒருநாள் கிரிக்கெட்: ரபாடாவின் உலக சாதனையை முறியடித்த ஸ்காட்லாந்து வீரர்

டண்டீ,

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 2027ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த தொடரின் ஒரு பகுதியான தகுதிசுற்று ஆட்டங்கள் (ஐ.சி.சி. உலகக் கோப்பை லீக் டூ 2023-2027) தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து – ஓமன் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஓமன் அணி வீரர்கள் ஸ்காட்லாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

வெறும் 21.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஓமன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஓமன் தரப்பில் அதிகபட்சமாக பிரதிக் அதவலே 34 ரன்கள் எடுத்தார். ஸ்காட்லாந்து தரப்பில் அறிமுக வீரராக களம் இறங்கிய சார்லி கேசெல் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 92 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய ஸ்காட்லாந்து 17.2 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 95 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சார்லி கேசெல் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ககிசோ ரபாடாவின் உலக சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.

அதாவது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த வீரர் என்ற ரபாடவின் சாதனையை (6/16) ஸ்காட்லாந்தின் சார்லி கேசெல் (7/21) முறியடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் சிறந்த பந்துவீச்சு:

சார்லி கேசெல் – 7/21 – ஓமன் 2024

ககிசோ ரபாரா – 6-/16 – வங்காளதேசம் 2015

பிடல் எட்வர்ட்ஸ் – 6/22 – ஜிம்பாப்வே 2003

ஜான் ப்ரைலின்க் – 5/13 – ஓமன் 2019

டோனி டோட்மைட் – 5/21 – இலங்கை 1988


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.