சுமாராகப் படிக்கும் பையன் திடீரென ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தால் எப்படி இருக்கும்? ஜோஸைய்யா தக்வானே ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வாங்கியபோது, அப்படித்தான் இருந்தது தென் ஆப்பிரிக்க மக்களுக்கு!
ஜோஸைய்யா வாங்கிய தங்கம், பல தலைமுறைகளாக அடிமைப்பட்டுக் கிடந்த ஓர் இனத்தின் வெற்றிச் சரித்திரம். தென் ஆப்பிரிக்கக் கறுப்பினத்தவரில் முதலில் தங்கம் வாங்கியவர் அவர்தான்! அங்கு, அப்போது கறுப்பினத்தவரின் நிலை மிகவும் மோசம். நாட்டின் மக்கள்தொகையில் முக்கால்வாசிப் பேர் கறுப்பின மக்களாக இருந்தாலும், அவர்கள் வாழ்ந்ததென்னவோ வெறும் பதின்மூன்று சதவிகித நிலத்தில்தான். மீதி இடங்கள் எல்லாம் வெள்ளையர் கையில்!
இந்த நிறவெறிக் கொள்கையால் தென் ஆப்பிரிக்காவை ஒலிம்பிக்ஸ் போன்ற சர்வதேச விளையாட்டுகளில் இருந்தே ஒதுக்கி வைத்திருந்தார்கள். கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய தலைவர் நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்து, ஆட்சி அதிகாரத்தை அவர் கையில் கொடுத்த பிறகு, 1992 ஒலிம்பிக்ஸில் தான் மீண்டும் அனுமதிக்கப்பட்டது தென் ஆப்பிரிக்கா.
ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாளர்கள் குடியிருப்பைச் சுத்தம் செய்யும் வேலை செய்தவர் ஜோஸைய்யா. மாதம் முந்நூற்று முப்பது டாலர் சம்பளம் வாங்கிக்கொண்டு காலம் தள்ளிய அவரை, அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கே தெரியாது.
ஜோஸைய்யாவுக்குச் சின்ன வயதிலேயே கல்யாணம் ஆகிவிட்டது. நான்கு குழந்தைகள். அவர் மழைக்குக்கூடப் பள்ளிக்கூடம் ஒதுங்கியதில்லை. வசித்தது காட்போர்டு அட்டைகளால் தடுக்கப்பட்ட ஒரு ரெடிமேட் வீட்டில்! எவ்வளவு உழைத்தும் வருமானம் போதவில்லை. ஒரு பாரில் பார்ட் டைம் வேலை பார்த்தார்… டாக்ஸி ஓட்டினார்.
இந்தச் சமயத்தில், தற்செயலாக மாரத்தான் போட்டி விளம்பரத்தைப் பார்த்ததுதான், அவரது வாழ்வில் ஏற்பட்ட மகத்தான திருப்புமுனை. ‘அது என்ன விளம்பரம்?’ என்று அக்கம் பக்கத்தில் அவர் விசாரித்தார். ‘மாரத்தான் போட்டியில் ஜெயித்தால் நிறையப் பணம் கிடைக்கும்’ என்றார்கள். மாரத்தான் ஓட்டம் பற்றி கொஞ்சம் விவரம் சேகரித்த ஜோஸைய்யா, கடனில் ஒரு செட் ஷூ வாங்கிக்கொண்டு போட்டிக்குப் போனார். முதல் போட்டியிலேயே வெற்றி. அடுத்தடுத்து ஏகப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு ஜெயிக்க ஆரம்பித்தார். வருட முடிவில், மாரத்தான் போட்டிகளில் ஜோஸைய்யாதான் தென் ஆப்பிரிக்க சாம்பியன்!
ஜாக்யூஸ் மாலன் என்ற கோச், ஜோஸைய்யாவைத் தேடி வந்து பார்த்தார். “கன்னாபின்னாவென்று ஏராளமான போட்டிகளில் கலந்து கொண்டு களைத்துப் போய்விடாதே. போட்டிகளைத் தேர்வு செய்து ஓடு. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது” என்று அட்வைஸ் செய்தார்.
அவரே ஜோஸைய்யாவுக்கு ‘கோச்’சும் ஆனார்! 1996 அட்லாண்டா ஒலிம்பிக்ஸுக்கு ஜோஸைய்யாவைத் தயார் செய்தார். ஆனால், ஒலிம்பிக்ஸுக்கு நான்கு மாதங்கள் முன்பாக அந்தச் சோகம் நிகழ்ந்தது. நிலக்கரிச் சுரங்கத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில், ஜோஸைய்யாவின் காரை வழிமறித்தனர் மூன்று பேர். கையில் துப்பாக்கி. சாதாரண திருடர்கள்தான்! அவர்களுக்குத் தேவை அந்த கார்தான். காரைவிட்டு ஜோஸைய்யாவை இறங்கச் சொன்னார்கள். ஆசையாக வாங்கிய கார்… இறங்க மறுத்தார் ஜோஸைய்யா! அவர்கள் சரமாரியாக முகத்தில் சுட. ஜோஸைய்யா எகிறிக் குதித்துத் தரையில் விழுந்தார். தாடையில் ஒரு குண்டு துளைக்க… மயங்கிச் சரிந்தார். கண்விழித்தபோது அவர் இருந்தது, ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சைப் பிரிவில்!
முன்பற்கள் இரண்டைக் காணோம்.
தாடையில் பெரிய கட்டு. எகிறி விழுந்ததால் முதுகில் பலத்த அடி. ‘பூரண ஓய்வு தேவை’ என்று டாக்டர்கள் கண்டிப்பாகச் சொல்லிவிட்டனர்! இந்தக் காயங்களோடு சேர்ந்து, மனோரீதியான பயமும் கூடிவிட்டது. துப்பாக்கியைப் பார்த்தாலே மிரள ஆரம்பித்தார் ஜோஸைய்யா. மாரத்தான் போட்டியைத் துப்பாக்கியால் வானத்தில் சுட்டுத்தான் துவக்கி வைப்பார்கள் அந்தச் சத்தம்கூட அவரைக் கலங்கடித்தது. ஆனால், அட்லாண்டா ஒலிம்பிக்ஸ் போட்டி தொடங்கியபோது, புது மனிதனாக வந்து நின்றார் ஜோஸைய்யா! கடைசி விநாடி வரை அவருக்குச் சவால் விட்டவர், தென்கொரியாவின் லீ போங் ஜூ. எல்லைக்கோட்டில் தலையை நீட்டி, மூன்று செகண்ட் முன்னணியில் ஜெயித்தார் ஜோஸைய்யா! கைக்குச் சிக்கியது தங்கப் பதக்கம். எழுதப் படிக்க மட்டுமில்லை, ஆங்கிலம் பேசக் கூடத் தெரியாது அவருக்கு! வீட்டுக்கு போன் செய்து, “மஞ்சள் கலர் பதக்கம் ஜெயிச்சுட்டேன்” என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார் ஜோஸைய்யா.
அந்த ஒலிம்பிக்ஸில் தென் ஆப்பிரிக்காவுக்குக் கிடைத்த ஒரே தங்கம், அதுதான்! ‘தங்கப் பையன்’ என்று செல்லமாகக் கூப்பிட்டு, தென் ஆப்பிரிக்காவே அவரை தேசிய ஹீரோவாகக் கொண்டாடியது! பதக்கம் வென்ற கையோடு அவர் செய்த முதல் காரியம் – எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டதுதான்! அவர் பணியாற்றிய நிலக்கரிச் சுரங்க நிறுவனம், ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் பெரிய வீடு கொடுத்தது. வீட்டின் முன்னறையில், கரும்பலகை ஒன்றை வைத்துக்கொண்டு டியூஷன் படித்தார். அதில் பெரிய சந்தோஷம் அவருக்கு! “என் தங்கப்பதக்கத்தைக்கூட யாராவது திருடிவிடலாம். ஆனால், என் கல்வியை யாராலும் திருடிவிட முடியாது” என்றார்.
பதக்கம் வாங்கிய பிறகுதான் அவருக்குக் கூடுதல் பிரச்னை. அடிக்கடி பேப்பரில் அவர் போட்டோ வரும். டி.வி-யில் பேட்டி வரும்.
இதையெல்லாம் பார்த்து விட்டு, அவரிடம் ஏராளமான பணம் இருப்பதாக பலரும் நினைத்து விட்டனர். நிறைய முறை ஜோஸைய்யாவை வழிமறித்துப் பணம் கேட்டிருக்கின்றனர். அவர் வீட்டின் பூட்டை உடைத்து நுழைந்திருக்கின்றனர்.
எல்லாவற்றையும் ‘சொந்தக்காரர்களின் அன்புத் தொல்லை’ என நினைத்துச் சகித்துக்கொண்டார் ஜோஸைய்யா!
“நான் ஒருவன் பதக்கம் வாங்கியதுமே கறுப்பின மக்கள் எல்லோரது வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் தீர்ந்துவிடும் என்று நினைக்கவில்லை. இதனால் நிறையப் பேர் ஆர்வமாகி, விளையாட்டுத் துறையில் கால்பதித்தால், அதுதான் எனக்கு வெற்றி!” என்று அடிக்கடி சொல்வார் அவர்.
2000-மாவது ஆண்டு ஒலிம்பிக்ஸ் அவருக்குச் சோகமாக அமைந்தது. போட்டிகளுக்காக அவர் கடுமையாகப் பயிற்சி எடுத்தபோது, அவரது கோச் ஜாக்யூஸ் மாலன் புற்றுநோயால் இறந்தார். அந்தச் சோகத்திலேயே அந்த தடவை பரிதாபமாகத் தோற்றுப் போனார் ஜோஸைய்யா!