கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 60,290 கனஅடி நீர் திறப்பு

பெங்களூரு,

கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.), மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. இந்த நிலையில் மழை பெய்யாததால் அணைகளுக்கு வரும் நீரின் அளவும், திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 122.75 அடியாக இருந்தது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரத்து 850 கனஅடியாக இருந்த நிலையில் நேற்று இரவு அது 46 ஆயிரத்து 843 கனஅடியாக குறைந்தது. இதேபோல் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரத்து 290 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 52 ஆயிரத்து 162 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதேபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 2,283.25 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரத்து 963 கன அடியாக குறைந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 29 ஆயிரத்து 855 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதேபோல், தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று அது வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 60 ஆயிரத்து 290 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர், டி.நரசிப்புராவில் உள்ள திருமாகூடலுவில் சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வருகிறது. நேற்று முன்தினம் கர்நாடக அணைகளிலும் இருந்து வினாடிக்கு 77 ஆயிரத்து 162 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.