“காங். தேர்தல் அறிக்கையை பட்ஜெட் உரையாக நிதியமைச்சர் படித்திருக்கிறார்” – ப.சிதம்பரம்

புதுடெல்லி: “தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படித்திருக்கிறார்” என்று மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், “தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படித்துள்ளார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 30ல் சொல்லப்பட்டுள்ள வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை (ELI) திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நிதியமைச்சர் ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி.

காங்கிரஸ் அறிக்கையின் பக்கம் 11-ல் குறிப்பிடப்பட்டுள்ள உதவித்தொகையுடன் கூடிய இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸின் பல ஆண்டுகால கோரிக்கையான ‘ஏஞ்சல் வரி’ ரத்து, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பக்கம் 31ல் சொல்லப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையும் தற்போது பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. மத்திய அரசு ஏஞ்சல் வரியை ரத்து செய்தது மகிழ்ச்சியை தருகிறது. இதேபோல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள வேறு சில யோசனைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நகலெடுத்திருக்கலாம். விரைவில் அதனை பட்டியலிடுகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.



இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், “நாட்டின் 500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு பணி அனுபவம் பெறும் வகையில் இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்கப்படும். இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் ஒருமுறை உதவியாக இளைஞர்களுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பங்குசந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்கள் திரட்டும் மூலதனத்துக்கு விதிக்கப்படும் ‘ஏஞ்சல் வரி’யும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு அரசு சார்பில் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும். அதாவது, இபிஎஃப்ஓ-வில் பதிவு செய்யப்பட்டு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெறும் இளைஞர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் வழங்கப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவற்றை தான் ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள திட்டங்கள் என குறிப்பிடுகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.