சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக வீடுகளுக்கு கட்டிட அனுமதியை ஆன்லைனில் வழங்கும் ஒருங்கிணைந்த புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 10 பயனாளிகளுக்கு கட்டுமான அனுமதி ஆணைகளை வழங்கினார்.
வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறையின்கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சார்பில், தமிழகத்தில் முதல்முறையாக கட்டிட அனுமதியை ஆன்லைனில் வழங்கும் ஒருங்கிணைந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள் ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, 10 பயனாளிகளுக்கு கட்டுமான அனுமதி ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் முத்துசாமி, சேகர்பாபு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, வீட்டுவசதி துறை செயலர் காகர்லா உஷா, நகர் ஊரமைப்பு இயக்குநர் பா.கணேசன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கட்டிட அனுமதிக்காக அலுவலகங்களுக்கு பொதுமக்கள் சென்றுவரும் நேரத்தை முழுமையாக தவிர்த்து, அதிகபட்ச வெளிப்படைத் தன்மையுடனும், நடைமுறையில் உள்ள கட்டிட விதிகளை எளிமைப்படுத்தும் வகையிலும் ஒரு புதுமையான முயற்சியாகவே சுயசான்றிதழ் திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.
இத்திட்டம் மூலம், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், நடுத்தர மக்கள் சுயசான்றிதழ் அடிப்படையில் ஒற்றை சாளர முறையில் கட்டிட அனுமதிகளை உடனடியாக பெற முடியும். அதிகபட்சம் 2,500 சதுரஅடி பரப்பளவு கொண்ட மனையில் 3,500 சதுரஅடி கட்டிட பரப்பளவுக்குள் தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 7 மீட்டர் உயரத்துக்கு உட்பட்டு கட்டப்படும் குடியிருப்பு கட்டிடத்துக்கு இத்திட்டத்தின்கீழ் எளிதாகவும், உடனடியாகவும் கட்டிட அனுமதி பெற முடியும். இதற்காக மென்பொருள் தொகுப்பு உருவாக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
தவிர, இந்த புதிய திட்டத்தின்கீழ் அனுமதி பெறும் கட்டிடங்களுக் கும், சாலைக்கும் இடையே உள்ள பகுதி 1.50 மீட்டராக குறைக்கப்பட் டுள்ளது. சதுர மீட்டருக்கு ரூ.2 என்ற கூராய்வு கட்டணம், உள்கட்ட மைப்பு மற்றும் வசதிகளுக்காக சதுரமீட்டருக்கு விதிக்கப்படும் ரூ.375 கட்டணம் ஆகியவற்றிலும் விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் உரிய கட்டணங்களை செலுத்திய பிறகு, ‘க்யூ ஆர் கோடு’ குறியீட்டுடன் கட்டிட அனுமதி மற்றும் வரைபடங்களை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், முன்கள ஆய்வு மேற்கொள்வதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டு, உடனடியாக கட்டுமான பணி மேற்கொள் ளவும் வழிவகை செய்யப்பட்டுள் ளது. கட்டிட முடிவு சான்று பெறுவதில் இருந்தும் விலக்கு அளிக் கப்படுகிறது என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறு கண்டறியப்பட்டால் சட்டப்படி தண்டனை: ஆன்லைனில் கட்டிட அனுமதி பெறும் திட்டம் தொடர்பாக பல்வேறு நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சுயசான்றிதழ் அடிப்படையில் வழங்கும் அனுமதி, 5 ஆண்டு வரை செல்லுபடியாகும். அதேநேரம், விண்ணப்பதாரர்தான் நில உரிமையாளர் என்பதற்கான எந்த உரிமையையும் இந்த அனுமதி உறுதிப்படுத்தாது. எனவே, இதை நில உரிமை ஆவணமாக பயன்படுத்த இயலாது.
சம்பந்தப்பட்ட நிலம், விவசாய நிலமாகவோ, நிறுவனத்துக்கு சொந்தமானதாகவோ, திறந்தவெளி பகுதி, கேளிக்கை பயன்பாட்டு பகுதி, சாலைக்கு ஒதுக்கப்பட்டதாகவோ இருந்தால் அனுமதி தானாக ரத்து செய்யப்படும். உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும்.
ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின்படியே கட்டிடம் கட்டப்பட வேண்டும். விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட வடிவமைப்பு, அடித்தளம், பயன்படுத்தப்படும் மரம், கான்கிரீட், கம்பி உள்ளிட்டவை உரிய விதிகளின்படி இருக்க வேண்டும். தண்ணீர் தொட்டி, மழைநீர் சேகரிப்பு அமைப்பு, கழிவுநீர் தொட்டி ஆகியவை உரிய விதிகளின்படி அமைக்கப்பட வேண்டும். விதிமீறல் கண்டறியப்பட்டால், சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
விண்ணப்பதாரரின் சுய சான்றிட்ட ஆவணங்கள், கட்டிட வரைபட அனுமதி ஆகியவற்றை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும். சுய சான்றிட்ட, சுயமாக எடுக்கப்பட்ட அனுமதியில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால், விண்ணப்பதாரருக்கு தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.