சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும் போது, “எப்பொழுதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் கடுமையான மின்வெட்டும், மின் கட்டண உயர்வும் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவது தமிழக வரலாறாக உள்ளது.
மக்களை அனைத்து வகைகளிலும் வாட்டி வதைப்பதற்கென்று ஒரு ஆட்சி கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழக மக்களின் மின்கட்டண சுமையை குறைக்க 100 யூனிட் விலையில்லா மின்சாரத்தை வழங்கி ஜெயலலிதா சாதனை படைத்தார்.
திமுக அரசோ, சொத்து வரி , குப்பை வரி, குடிநீர், மின்சாரம், பத்திரப்பதிவு கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி வருகிறது. ஆனால், விளம்பரம் வெளிச்சத்தையே அரசு அக்கறை செலுத்தி வருகிறது.
தங்கள் ஆட்சியில் மக்கள் உண்மையிலேயே பயன் சென்றடைகிறார்களா என்பதை ஆய்வு செய்யாமல், விளம்பர வெளிச்ச ஆட்சியால் தமிழகத்தை இருள் சூழ்ந்து கொண்டிருக்கிறது.
ஆண்டுக்கு ஒரு முறை பட்ஜெட் வெளியிடுவதைப்போல மின் கட்டண உயர்வை வெளியிட்டு வருகிறது, நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களை பெற்று, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்தவுடன் தமிழக மக்களின் நெற்றியில் பட்டை நாமத்தை போட்டு மூன்றாவது முறையாக 5 சதவிகித மின் கட்டண உயர்வை பரிசளித்திருக்கிறார்.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 200 யூனிட் மின்சாரம் 170 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. தற்போது திமுக ஆட்சியில் 235 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் அதிமுக ஆட்சியில் 300 யூனிட் மின்சாரம் 530 ரூபாய், திமுக ஆட்சியில் 705 ரூபாய். 400 யூனிட் 830 ரூபாய், தற்போது 1175 ரூபாய். 500 யூனிட் 1130 ரூபாய், தற்போது 1805 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
மின் கட்டணம் உயர்வு மூலம் அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு 35,000 கோடி ரூபாய் கிடைக்கக்கூடிய சூழ்நிலையில் மின்வாரியத்தின் நிலை கவலைக்குரியதாக இருக்கிறது. மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல் தனியாரிடமிருந்து கூடுதல் விலைக்கு 65,000 கோடி ரூபாய் அளவுக்கு வெளிச்சந்தையில் வாங்குகிற காரணத்தால்தான் மின் கட்டண உயர்வை மக்கள் தலையில் சுமத்தியுள்ளார்கள்.
இதனால், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்களில் 15 சதவிகித சிறு குறு நிறுவனங்கள் மூடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மீதியுள்ள 85 சதவிகித சிறு குறு நிறுவனங்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது.
தேர்தல் அறிக்கையில் மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்றார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் மின்கட்டணத்தை உயர்த்த ஆலோசனை செய்யப்படும் என்ற தகவலுக்கே உடனடியாக போராட்டம் நடத்தியவர் ஸ்டாலின். நிர்வாக சீர்கேட்டால் மின் கட்டணத்தை உயர்த்தி விட்டு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு நியாயப்படுத்துகிறார்.
மத்திய அரசு ஆணையின்படி மின்சார வாரியத்தின் இழப்பை ஜெயலலிதா ஆட்சியிலும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் மாநில அரசு ஏற்றுக் கொண்டது.
தமிழகத்தில் 2 கோடி 21 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது. இதில் ஒரு கோடியே 90 லட்சம் பேர் மாதம் தோறும் அரிசி ,பாமாயில், பருப்பு வாங்குகின்றனர். வெளிச்சந்தையில் ஒரு கிலோ துவரம் பருப்பு 185 ரூபாய்க்கும், பாமாயில் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விறகும் நிலையில் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பருப்பு 30 ரூபாய்க்கும், பாமாயில் 25 ரூபாய்க்கும் ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலிருந்து மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. திமுக ஆட்சியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சமையல் எண்ணெய், பருப்பு போன்றவை வழங்கப்படவில்லை. இதையெல்லாம் கண்டித்துதான் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்துகிறோம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88