ஆன்மிக நகரமான பழனிக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதுதவிர வேலை, கல்வி தொடர்பாகவும், பொருள்கள் வாங்கவும், சுற்றுலாத் தலம் என்பதாலும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பலரும் பழனிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பழனியின் பிரதான சாலையில் தெருநாய் ஒன்று விரட்டி, விரட்டி கடித்ததில், கல்லூரி மாணவி ஒருவர் காயமடைந்தார். அதே தெருநாய் அந்த மாணவியைத் தவிர மேலும் 3 பேரையும் கடித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி நகரில் கடந்த சில நாள்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. குறிப்பாக சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்வோரையும், பாதசாரிகளையும் நாய்கள் விரட்டிக் கடிக்கின்றன. இதனால் ஏராளமானோர் விபத்தில் சிக்கியும், நாய் கடித்தும் காயமடைகின்றனர்.
இதற்கிடையே பழனியில், வேல் ரவுண்டானா – புதுதாராபுரம் செல்லும் சாலை எப்போதுமே பரபரப்பு நிறைந்த பகுதியாக இருக்கும். நெரிசல் மிகுந்த அச்சாலையில் தீயணைப்பு நிலையம் அருகில் காலையில் ஹேமமாலினி (வயது 19) என்ற மாணவி, பாலிடெக்னிக் கல்லூரிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது தெருநாய் ஒன்று திடீரென்று ஹேமமாலினியின் காலைக் கவ்வியது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, நிலைதவறி கீழே விழுந்துள்ளார். இருப்பினும் அந்த நாய் சிறிது தூரம் அவரை விரட்டிச் சென்று கடிக்கப் பாய்ந்தது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் தீயணைப்புப் படையினர், மாணவியைக் கடிக்கப் பாய்ந்த நாயை விரட்டினர். பின்னர் நாய் கடித்ததில் காயமடைந்த ஹேமமாலினியை தீயணைப்புப் படைவீரர்கள் மீட்டு, சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிறிது நேரத்தில் அதே தெரு நாய், அந்தச் சாலையில் நடந்து சென்ற முதியவர் உட்பட மேலும் 3 பேரை கடித்துக் குதறியது. பின்னர் அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சிகிச்சை முடிந்து கல்லூரி மாணவி உட்பட 4 பேரும் வீடு திரும்பினர். இதற்கிடையே கல்லூரி மாணவியை நாய் விரட்டிச் சென்று கடித்த வீடியோ காட்சிகள், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பழனியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் பொதுவெளியில் சுற்றித்திரிந்த தெரு நாய்களை முறையாகப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் நேற்று ஒரே நாளில் 4 பேரைக் கடித்த தெரு நாயை, பழனி நகராட்சி ஊழியர்கள் வலையை வைத்துப் பிடித்தனர். அதன் பிறகு அந்த நாய்க்கு, வெறிநாய் கடி தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.