புதுடெல்லி: “பாஜகவின் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளும் வகையில் மத்திய பாஜக அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். இதில் ஆந்திரா மற்றும் பிஹார் மாநிலத்துக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதனைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பட்ஜெட் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “பாஜகவின் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளும் (குர்சி பச்சாவோ) பட்ஜெட் இது. மற்ற மாநிலங்களின் பணத்தில் பாஜக தனது கூட்டணி மாநிலங்களுக்கு வெற்று வாக்குறுதியை கொடுத்துள்ளது. சாதாரண குடிமக்களுக்கு பட்ஜெட்டில் எந்த நிவாரணமும் இல்லை. மாறாக, கூட்டாளிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. மேலும், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டுகள் Copy, Paste செய்யப்பட்டுள்ளன” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், “தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படித்துள்ளார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 30ல் சொல்லப்பட்டுள்ள வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை (ELI) திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நிதியமைச்சர் ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி.
காங்கிரஸ் அறிக்கையின் பக்கம் 11-ல் குறிப்பிடப்பட்டுள்ள உதவித்தொகையுடன் கூடிய இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸின் பல ஆண்டுகால கோரிக்கையான ‘ஏஞ்சல் வரி’ ரத்து, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பக்கம் 31ல் சொல்லப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையும் தற்போது பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. மத்திய அரசு ஏஞ்சல் வரியை ரத்து செய்தது மகிழ்ச்சியை தருகிறது. இதேபோல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள வேறு சில யோசனைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நகலெடுத்திருக்கலாம். விரைவில் அதனை பட்டியலிடுகிறேன்” என்று தெரிவித்திருந்தார். | வாசிக்க > “ஆட்சியை காப்பதற்கான அறிவிப்புகள்” – மத்திய பட்ஜெட் மீது இண்டியா கூட்டணி தலைவர்கள் விமர்சனம்