சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகள் ஆதங்கம் போன்றவற்றின் அடிப்படையில் பிரச்சினைகள் அணுகப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வைத்தியர் அருச்சுனாவின் துணிச்சலான செயற்பாடுகளே, வைத்தியசாலை தொடர்பில் உரிய கவனம் செலுத்தி அங்கு காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான சூழலை உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.
வைத்தியர் அருச்சுனா தொடரந்தும் பிரதேசங்களில் கடமையாற்ற வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக துறைசார் அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
சாவகச்சேரி வைத்தியசாலையின் செயற்பாடுகளை வினைத் திறனாக முன்னெடுக்கும் வகையில் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சாவகச்சேரி வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பாக கடந்த காலங்களில் மக்களினால் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள், மற்றும் வெளிப்படுத்தப்பட்ட முறைப்பாடுகள் போன்றவை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
அதேபோன்று முறைகேடுகள் தொடர்பாக விசாணைகளை முன்னெடுப்பதற்கும் எதிர்காலத்தில் அவ்வாறான முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதற்குமான அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகள் நிர்வாகத்தினருக்கு அமைச்சரினால் வழங்கப்பட்டது.
பிரதேச மக்களினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரும், வைத்தியசாலை நிர்வாகத்தினரும் இணைந்து வெளிப்படை தன்மையுடன் வைத்தியசாலையின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.