புதுடெல்லி: பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம் 2.0-வின் கீழ், ஏழைகள், நடுத்தர பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் கோடி முதலீட்டில் 1 கோடி வீடுகள் கட்டித் தர திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (ஜூலை 23) காலை தாக்கல் செய்தார். அவர் தனது உரையில், “பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம் 2.0-வின் கீழ், ஏழைகள், நடுத்தர பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் கோடி முதலீட்டில் 1 கோடி வீடுகள் கட்டித் தர திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் ரூ.2.2 லட்சம் கோடி உதவியும் அடங்கும். குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கவும், வட்டி மானியம் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ளன. தொழில்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்குவதற்கு தங்குமிடங்களுடன் கூடிய வாடகை வீடுகள் பொது – தனியார் கூட்டு முயற்சியில் ஏற்படுத்தி தரப்படும். மேம்பட்ட தன்மையுடன் திறமையான மற்றும் வெளிப்படையான வாடகை வீட்டுச் சந்தைகளுக்கான கொள்கைகள் மற்றும் விதிமுறைகளும் நடைமுறைப்படுத்தப்படும்.
நகரங்களை வளர்ச்சி மையங்களாக உருவாக்க மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசு பணியாற்றும். 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 14 பெரிய நகரங்களுக்கு போக்குவரத்து சார்ந்த வளர்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்படும். தெருவோர வியாபாரிகளின் வாழ்க்கையை மாற்றுவதில் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் வெற்றியை குறிக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ஒவ்வொரு ஆண்டும் 100 வாராந்திர தெரு உணவு மையங்களை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த இருக்கிறது.
முத்திரைத் தீர்வையைத் தொடர்ந்து வசூலிக்கும் மாநிலங்கள், அனைவருக்குமான கட்டணத்தை குறைப்பதை மத்திய அரசு ஊக்குவிக்கும். பெண்கள் வாங்கும் சொத்துக்களுக்கான வரிகளை மேலும் குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்.
சிறுவர்களுக்கென ‘வாத்சால்யா’ எனப்படும் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான பங்களிப்பை மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் செலுத்துவார்கள். இத்திட்டத்தில் இணையும் சிறுவர்கள் பருவ வயதை எட்டும் போது, அவர்களது கணக்கை வழக்கமான தேசிய ஓய்வூதிய திட்ட கணக்காக மாற்றிக் கொள்ளலாம். தேசிய ஓய்வூதிய திட்டத்தை மறு ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் சாமான்ய மக்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள் மற்றும் சிறுமிகள் பலனடையும் வகையிலான திட்டங்களுக்கு, பட்ஜெட்டில் ரூ.3.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு முக்கியத்தரப்பினரில் ஒரு பகுதியான பெண்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என, இடைக்கால பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டது. மதம், ஜாதி, பாலினம், வயது பாகுபாடின்றி அனைத்து இந்தியர்களின் நிலையான முன்னேற்றத்திற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது.
தொழில்துறையினரின் ஒத்துழைப்புடன், மகளிர் விடுதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களை ஏற்படுத்துவதன் வாயிலாக, பெண்கள் அதிகளவில் வேலையில் சேர்வதற்கு அரசு உதவி செய்யும். மேலும் பெண்களுக்கென திறன்மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதுடன், மகளிர் சுய உதவிக் குழுவினரின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தவும் உதவி செய்யப்படும்” என கூறினார்.