பொன்னியின் செல்வன் படத்திற்காக ஃபிலிம்பேர் விருதைப் பெற்றிருக்கும் நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் அந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து இயக்குனர் மணிரத்னத்தையும் பாராட்டி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கியின் வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பல நட்சத்திரங்களை களமிறக்கி இருந்தார் மணிரத்னம். ஏ.ஆர் ரகுமான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைத்தது குறித்த அனுபவங்களைப் பகிர்ந்த ஏ.ஆர் ரகுமான் மணிரத்னத்தைப் பாராட்டியும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்த அந்தப் பதிவில், “பொன்னியின் செல்வன் படத்தின் இசையமைப்பிற்கான வேலைகள் வெகு முன்னதாகவே தொடங்கிவிட்டன. ஓரிரு வருடங்களுக்கு முன், என்னையும், எனது குழுவினரையும் ஆராய்ச்சிக்காகவும், சில இசைக்கருவிகளை வாங்குவதற்காகவும் மணிரத்னம் பாலிக்கு அழைத்து சென்றார்.
அவரின் ஆதரவுடன்தான் எங்கள் பணிகளைத் தொடங்கினோம். அந்த இசைக்கருவிகளை இந்தியாவிற்குக் கொண்டு வந்தோம். அவை பல டியூன்களை உருவாக்க எங்களுக்கு வழிவகுத்தது. மிகவும் சுவாரசியமான விஷயங்களைத் தேர்ந்தெடுக்கும் திறமை மணிரத்னம் அவர்களிடம் இயல்பாகவே இருக்கிறது.
அவரது தேர்வுகள் எப்போதும் தனித்துவமாகவும், முன்னோக்கிச் சிந்திக்கக்கூடியதாகவும் இருக்கும். மணிரத்னம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொன்னியின் செல்வன் படத்தில் என்னுடன் பணிப்புரிந்த அனைவருக்கும் நன்றி. எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.