தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துரெங்கபுரத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ கஸ்தூரி அம்மாள் மங்கம்மாள் கோயில் உள்ளது. இது நடிகர் தனுஷின் குலதெய்வ கோயிலாகும். இந்த கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை அவரது குடும்பத்தினர் வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த ஆண்டு இந்தக் கோயிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் தனுஷ் அவர்களின் தந்தையும் திரைப்பட இயக்குநருமான கஸ்தூரிராஜா வந்திருந்தார். அவரது தலைமையில்தான் திருப்பணிகள் நடைபெற்றன.
அப்போது தனுஷ் வெளிநாட்டில் படப்பிடிப்பிலிருந்ததால் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. இதனால் தற்போது தன் இரு மகன்களுடன் குலதெய்வ கோயிலுக்கு வந்திருந்தார். அவரே இயக்கி நடிக்கும் 50வது படமான ‘ராயன்’ இந்த வாரம் வெளியாகிறது. அந்தப் படம் வெற்றிப் படமாக அமையவும் சிறப்பு வழிபாடு செய்தார்.
அவருடன் அவருடைய அண்ணனும், இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்து கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனர். அப்போது கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு நடிகர் தனுஷ் மற்றும் குடும்பத்தினரை வரவேற்றனர். இதையடுத்து தேவாரம் அருகிலுள்ள தனுஷின் தாயார் வழி குலதெய்வ கோயிலான சங்கராபுரம் கருப்பசாமி கோயிலுக்குச் சென்று வழிபட்டனர்.