மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை (Union Budget 2024-25) நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதில், `புதிய வருமான வரி வரம்புகளின்படி ரூ.3 லட்சம் வரையில் வருமான வரி கிடையாது. ஆண்டுக்கு ஒரு கோடி இளைஞர்கள் என ஐந்தாண்டுகளுக்கு ஐந்து கோடி இளைஞர்களுக்கு 500 முன்னணி நிறுவனங்களில் மாதம் ரூ.5,000 கொடுப்பனவுடன் பயிற்சி. தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு ரூ.75,000-ஆக அதிகரிப்பு.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 25 சதவிகிதமாகக் குறைப்பு. தங்கம், வெள்ளி, பிளாட்டினம், செல்போன் மற்றும் செல்போன் உதிரி பக்கங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு. மூன்று வகையான புற்றுநோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரி ரத்து. நாடுமுழுவதும் 3 கோடி குடும்பங்களுக்கு புதிய வீடுகள். முத்ரா கடன் தொகை வரம்பை ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்த முடிவு. ரூ.1.52 லட்சம் கோடி விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு. மாணவர்களுக்கான கல்விக்கடன் ரூ. 10 லட்சம் வரையில் வழங்கப்படும்’ உள்ளிட்ட பலவற்றை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
குறிப்பாக, என்.டி.ஏ கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆளும் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களுக்குச் சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, ஆந்திராவுக்கு ரூ.15,000 கோடியும், பீகாருக்கு சாலைத் திட்டங்களுக்காக ரூ.26,000 கோடியும், பீகாரின் வெள்ளம் தடுப்புக்கு 11,500 கோடியும் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மத்திய அரசின் இந்த பட்ஜெட்டை எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் விமர்சித்துவருகின்றனர்.
ராகுல் காந்தி:
ஆட்சியைத் தக்கவைப்பதற்கான பட்ஜெட். சாதாரண மக்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை. அம்பானி, அதானிக்கு பயனளிக்கும் பட்ஜெட். காங்கிரஸின் முந்தைய பட்ஜெட் மற்றும் தேர்தல் அறிக்கையின் நகல் இந்த பட்ஜெட்.
சசி தரூர்:
சாமானியர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகள் பற்றி எதுவும் இல்லை. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் (MNREGA) பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பீகார் சுயேச்சை எம்.பி பப்பு யாதவ்:
4 கோடி வேலை தருவதாகச் சொல்கிறார்கள், கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை வேலைகள் கொடுத்தார்கள்?
மாயாவதி:
நாட்டின் 125 கோடிக்கும் அதிகமான நலிந்த பிரிவினரின் மேம்பாடு மற்றும் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான எந்த சீர்திருத்தக் கொள்கையும் நோக்கமும் புதிய அரசிடம் இல்லை.
சு.வெங்கடேசன்:
வழக்கமாகச் சொல்லும் திருக்குறள் உட்பட தமிழ்நாட்டுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. அன்னிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுகிற கார்ப்பரேட் வரி குறைப்பு. மறைந்த விவசாய அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைத்த C 2 + 50 % குறைந்தபட்ச ஆதரவு விலை அரசால் தரப்படுகிறதா? 2014-ல் 10 கோடி வேலை என்று அறிவித்தது ஆனது?
500 பெரிய நிறுவனங்களில் தொழில் பயிற்சி பெற இளைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு. இந்த 500 பெரிய நிறுவனங்களில் எவ்வளவு வேலை வாய்ப்புகள் கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது? இன்டர்ன்ஷிப் பெறுபவர்கள் அங்கே வேலைவாய்ப்பு பெறுவார்களா? இல்லை அவர்களின் வேலையை மலிவான ஊதியத்திற்கு வாங்குகிற ஏற்பாடா? பீகார், ஆந்திரா சிறப்புத் திட்டங்கள் அறிவிப்புகள், 10 ஆண்டுகளாக எவ்வளவு புறக்கணித்தீர்கள் என்பதன் ஒப்புதலா?
எடப்பாடி பழனிசாமி:
இந்த வரவு, செலவு அறிக்கை வடமாநிலங்களையும், பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது, தமிழ்நாட்டின்மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது.
வைகோ:
மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து ஓராண்டு காலம் போராடிய விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிதிநிலை அறிக்கையில் ஏற்கப்படவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.
முத்தரசன்:
ஏற்கெனவே விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்குவதற்கு 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இப்போது கிளஸ்டர் என்ற பெயரில் மீண்டும் அதே முயற்சி எடுக்கப்படுகிறது. பழைய பென்ஷன் திட்டம் வேண்டும் என்ற கூக்குரல் எங்கும் ஒலித்தாலும், அதை ஏற்க முடியாது என்று நிதிநிலை அறிக்கை திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
ராமதாஸ்:
ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களுக்குச் சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டுக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படாதது வருத்தமளிக்கிறது. பழைய வருமான வரி முறையில் மாற்றங்கள் செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது. தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி முழுமையாகக் குறைக்கப்படவில்லை என்றாலும், தற்போது குறைக்கப்பட்டிருப்பது ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கும்.