சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன கிளை மேலாளர்களின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, திருவள்ளூர், ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் முதலீடுகளுக்கு அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையில், ஆருத்ரா நிறுவனம் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 255 பேரிடம் சுமார் ரூ.2 ஆயிரத்து 438 கோடி பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து இந்நிறுவன இயக்குநரான ரூசோ, ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் ஆவடி கிளை மேலாளர்கள் அருண்குமார், ஜெனோவா உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருண்குமார், ஜெனோவா ஆகியோர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், “இந்த வழக்கில் இன்னும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளது. பலர் தலைமறைவாகி உள்ளனர். எனவே, மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது,” என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஆருத்ரா நிறுவனத்தின் கிளை மேலாளர்களான அருண்குமார், ஜெனோவா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.