இந்தியாவில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை இருப்பதாக தகவல் இல்லை: மத்திய அரசு

புதுடெல்லி: நாட்டின் எந்த மாவட்டத்திலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை பின்பற்றப்படுவதாக தகவல் இல்லை என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று (ஜூலை 24) கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், “நாடாளுமன்றம் இயற்றிய ‘கையால் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களை பணியமர்த்துவதை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013 (MS Act, 2013)’, 06.12.2013 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இச்சட்டத்தின் விதிகளின்படி, கையால் மனிதக் கழிவுகளை அகற்றுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்த தேதியிலிருந்து எந்தவொரு நபரும் அல்லது முகமையும் கையால் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் எந்த நபரையும் ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது என சட்டம் கூறுகிறது. விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும் சட்டத்தில் குறிப்பிடப்படுகிறது. கையால் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் (எஸ்.ஆர்.எம்.எஸ்) கீழ் பல்வேறு பயன்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.



சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அனைத்து மாவட்டங்களையும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் பணியிலிருந்து விடுபட்டதாக அறிவித்துக் கொள்ளுமாறும் அல்லது சுகாதாரமற்ற கழிப்பறைகள் மற்றும் கையால் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் விவரங்களை “தூய்மை இயக்கம்” கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இருப்பினும், இதுவரை செயலியில் நம்பகமான தரவு எதுவும் பதிவேற்றப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.