மும்பை,
சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டுவந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்தது. இதையடுத்து பலகட்ட நேர்காணல், ஆலோசனைகளுக்கு பின் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்படும் முன் அந்த பதவிக்கு ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர், மஹேலா ஜெயவர்த்தனே மற்றும் ஸ்டீபன் ப்ளெமிங் ஆகிய வெளிநாட்டு வீரர்களும் பரிசீலனையில் இருந்ததாக கூறப்பட்டது. மேலும், ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ஆஷிஷ் நெஹ்ராவும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் அவர் இந்திய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பைக்கவில்லை.
இந்நிலையில், தனது குழந்தைகளுக்காகதான் இந்திய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார். இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பது பற்றி சிந்திக்கவே இல்லை. எனது குழந்தைகள் மிகவும் சிறியவர்கள். தற்போது பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கவுதம் கம்பீருக்கும் குழந்தைகள் இருக்கின்றனர்.
ஆனால் ஒவ்வொருவருக்கும் வேறு வேறான யோசனைகள் இருக்கும். அதனால் கம்பீர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். என் குழந்தைகளைப் பிரிந்து 9 மாதங்கள் பயணம் செய்யும் மனநிலையில் நான் தற்போது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.பி.எல் தொடரில் ஆஷிஷ் நெஹ்ரா பயிற்சியின் கீழ் குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு முறை சாம்பியன் பட்டமும், ஒரு முறை 2ம் இடமும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.