எட்மண்டன்,
கனடாவின் எட்மண்டன் நகரில் சுவாமி நாராயண் என்ற இந்து கோவில் ஒன்று உள்ளது. இதன் மீது அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் அடையாளம் தெரியாத நபர்கள் வர்ணங்களை பூசி சேதப்படுத்தி உள்ளனர்.
இதுபற்றி நேபியான் தொகுதிக்கான எம்.பி. சந்திர ஆர்யா கூறும்போது, இந்து மற்றும் கனடா சமூக மக்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையிலான சம்பவங்கள் நேரடியாகவே அதிகரித்து உள்ளன. சுவாமி நாராயண் கோவில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக, கிரேட்டர் டொரண்டோ பகுதி, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் கனடாவின் பிற பகுதிகளில் வெறுப்பை உமிழ கூடிய வகையில் கோவில் சுவர்களில் ஏதேனும் எழுதுவது உள்பட தாக்குதல்கள் நடந்து வருகின்றன என அதுபற்றி எக்ஸ் சமூக ஊடக பதிவில் வெளியிட்டு உள்ளார்.
கனடா காவல் துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இந்து கனடா மக்களுக்கு எதிராக உடல்ரீதியிலான தாக்குதல்கள் நடைபெறுவதற்கு முன் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்யா வலியுறுத்தி உள்ளார். இதில், காலிஸ்தானிய பயங்கரவாதிகள் ஈடுபட்டு இருக்க கூடும் என்று அவர் நேரடியான குற்றச்சாட்டையும் தெரிவித்து இருக்கிறார்.
இதேபோன்று, கனடாவின் பொதுமக்கள் சபைக்கான உறுப்பினர் ராண்டி பொய்சான்னால்ட், கோவில் மீது வர்ணம் பூசப்பட்டு, வெறுப்புணர்வு பரப்பப்பட்டு உள்ளது. கனடாவில் வெறுப்புக்கு இடம் இல்லை.
அதுவும் வழிபாடு மற்றும் பிரார்த்தனை செய்யும் இடங்களில் அதற்கு இடம் கிடையாது. நம்முடைய நகரின் மதிப்புக்கு எதிரான மற்றும் தவறான செயல் ஆகும் என்று தெரிவித்து உள்ளார்.
கனடாவில் இதற்கு முன்பும், மிஸ்ஸிசாகா மற்றும் பிராம்ப்டன் பகுதிகளிலும் கோவில்கள் தாக்குதல்களுக்கு இலக்காகி இருக்கின்றன. இதற்கு இந்திய சமூகத்திடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.
கடந்த ஆண்டு, வின்ட்சாரில் உள்ள இந்து கோவில் ஒன்றின் மீது இந்தியாவுக்கு எதிரான வாசகங்களுடன் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு பரவலான கண்டனங்கள் எழுந்தன. உடனடியாக நடவடிக்கை கோரி கனடா மற்றும் இந்திய அதிகாரிகளிடம் கேட்டு கொள்ளப்பட்டது.