பெங்களூரு: கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணைய வழக்கில் அம்மாநில முதல்வர் சித்தராமை யாவுக்கு எதிராக சதி செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் மீது பெங்களூரு போலீஸார்வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் ரூ.187.3 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதற்கு ஒத்துழைக்க மறுத்ததால் தனக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக கூறி, அதன் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.பத்மநாபா, தலைமை கணக்காளர் பரசுராம், யூனியன் வங்கியின் எம்ஜிசாலை கிளை மேலாளர் சுஷ்சிதா உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.14.5கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த நாகேந்திரா, ஆணையத்தின் தலைவர் பசனகவுடா தட்டல், நாகேந்திராவின் உதவியாளர் ஹரீஷ் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து நாகேந்திராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக அரசின்சமூக நலத்துறை கூடுதல் இயக்குநரும், வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் முன்னாள் இணை இயக்குநருமான கல்லேஷ் பெங்களூரு சேஷாத்ரிபுரம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘‘பழங்குடியினர் ஆணைய நிதி முறைகேடு தொடர்பாக கடந்த 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மித்தல், முரளி கண்ணன் ஆகியோர் என்னை விசாரித்தினர். இரு நாட்களும் என்னிடம் 17 கேள்விகள் கேட்டனர். அப்போது முதல்வர் சித்தராமையாவின் வழிகாட்டு தலின்படியே நிதியை எம்ஜி சாலை வங்கிக் கிளைக்கு மாற்றினேன் என பொய்யாக வாக்குமூலம் தர வேண்டும் என நெருக்கடி கொடுத்தனர். அதற்கு மறுத்ததால் 2 அதிகாரிகளும் என்னை கைதுசெய்யப்போவதாக மிரட்டி வருகின்றனர். மேலும் சித்தராமையாவுக்குஎதிராக சதி செய்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, அமலாக்கத் துறை அதிகாரிகளான மித்தல், முரளி கண்ணன் ஆகியோர் மீது முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக சதி செய்ததாக 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.