கோவை: 10 ஆண்டுகளாக வெளியில் வராத தாய், மகள்; வீட்டை சுத்தம் செய்ய தடை… அதிகாரிகளுக்கு மிரட்டல்!

கோவை, ராம்நகர் பகுதியில் தனியார் அப்பார்ட்மென்ட் உள்ளது. அங்கு தாய், மகள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக வீட்டை விட்டு  வெளியில் வரவில்லை. அக்கம், பக்கத்தினர் யாருடனும் தொடர்பில்லாமல் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்துள்ளனர்.

குப்பை

வெளி உலக தொடர்பே இல்லாமல், வீட்டையும் சுத்தம் செய்யாமல் குவிந்து கிடந்த குப்பைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தது குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் அவர்களின் வீட்டுக்கு சென்று சுமார் 2 டன் குப்பைகளை அகற்றியது. ஆனாலும் குப்பைகள் அதிகமாக இருந்த நிலையில், அப்பார்ட்மென்ட் அசோஸியேசன் நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று புகார் எழுந்துள்ளது.

குப்பை அகற்றியபோது

“செய்திகள் வெளியானதால் எங்கள் அப்பார்ட்மென்ட் பெயர் கெட்டுவிட்டது. அவர்கள் ஒரு வீட்டை சுத்தம் செய்வதால், எங்கள் அப்பார்ட்மென்ட் முழுவதும் பூச்சிகள் பரவிவிடும்.” என்று சொல்லி அலுவலர்கள், தன்னார்வலர்களை அனுமதிப்பதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

அந்தப் பகுதி மக்களிடம் பேசியபோது, “தாய், மகள் நல்ல வசதி படைத்தவர்கள். தற்போதிருக்கும் அப்பார்ட்மென்ட் அவர்கள் சொந்த வீடு. இதுதவிர அவர்களுக்கு மேலும் சில வீடுகள் இருக்கின்றன.

குப்பை

மூதாட்டியின் கணவர் இருந்தபோதும், அந்த வீட்டுக்கு யாரும் செல்ல மாட்டார்கள். அடிக்கடி பூஜை நடத்துவார்கள். வெளி உலக தொடர்பு பெரிதாக இருக்காது. அவர் இறந்தப் பிறகு இவர்கள் வெளியில் வருவதை முற்றிலும் நிறுத்திவிட்டனர்.

வீட்டில் திடீரென நள்ளிரவு பூஜை செய்வார்கள். தாய், மகள் இருவருமே ஆங்கிலம் நன்கு பேசுவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வீட்டை சுத்தப்படுத்தியபோது, அந்த சாலை முழுவதும் கரப்பான் பூச்சிகள் ஓடின. அந்தளவுக்கு சுகாதாரமே இல்லாமல் உள்ளது. இத்தனைக்கும் அவர்களின் உறவினர்கள் சிலர் அந்த அப்பார்ட்மென்ட்டிலேயே வசிக்கிறார்கள்.

குப்பை

மாநகராட்சி நிர்வாகம் குப்பையை அகற்றினாலும், அவர்கள் அகற்றியதை விட இன்னும் 2 மடங்கு குப்பை வீட்டில் உள்ளது. குப்பைகளை அகற்றி, தாய் மகள் இருவருக்கும் மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.” என்றனர்.

இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது, “அப்பார்ட்மென்ட் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. உள்ளே சென்ற அலுவலர்கள், ஊழியர்களை மிரட்டுகிறார்கள். அங்கிருக்கும் பலர் அந்த பெண்களின் உறவினர்கள். ஏற்கெனவே நாங்கள் சென்றபோது, ‘உங்களை யார் வரச்சொன்னார்கள். எங்கள் பொருள்களை காணவில்லை.

ஆணையர் சிவகுரு பிரபாகரன்

உங்கள் மீது திருட்டு வழக்கு கொடுத்துவிடுவோம்.’ என்று கூறினார்கள். இதனால் காவல்துறை உதவியுடன் சென்று தான் தூய்மை பணி செய்தோம். இந்த வாரத்தில் மீதமுள்ள குப்பைகளை அகற்றி, அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.