IND vs SL T20, Hardik Pandya: இலங்கை அணிக்கு எதிராக தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஓடிஐ தொடர்களை விளையாட இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஜூலை 27ஆம் தேதி டி20 தொடர் தொடங்குகிறது. ஜூலை 28, 30 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த டி20 போட்டிகள் நடைபெறும் நிலையில், ஆக. 2, 4, 7ஆம் தேதி ஆகிய நாள்களில் மூன்று ஓடிஐ போட்டிகளும் நடைபெறுகின்றன. டி20 போட்டிகள் பல்லேகலே நகரிலும், ஓடிஐ போட்டிகள் கொழும்பு நகரிலும் நடைபெறுகின்றன.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் (Gautam Gambhir) பொறுப்பேற்ற உடன் நடைபெறும் முதல் தொடர் இதுதான். இதுகுறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாகியிருக்கும் சூழலில், நேற்று முன்தினம் இந்திய அணியினர் மும்பையில் இருந்து இலங்கைக்கு சென்றனர். குறிப்பாக, டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெற்றாலும் பெரும்பாலும் இந்திய டி20 அணியை சேர்ந்தவர்களே தற்போது இலங்கைக்கு சென்றுள்ளனர். ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓடிஐ அணியில் இடம்பெற்றுள்ளதால் அவர்கள் சற்று தாமதமாக அணியுடன் இணைந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.
வலைப்பயிற்சியில் ருசீகரம்…!
ஐசிசி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியிருந்தாலும், ரோஹித் சர்மா – விராட் கோலி – ரவீந்திர ஜடேஜா ஆகிய மூன்று சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்றிருப்பதால் அவர்களின் இடத்தை யார் யார் நிரப்பப் போகிறார்கள் என்ற கேள்வி இந்த தொடரை சுவாரஸ்யமாகி உள்ளது. அதுமட்டுமின்றி, டி20 உலகக் கோப்பை தொடரில் துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவுக்கு (Hardik Pandya) இம்முறை எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. மாறாக, சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) கேப்டனாக்கப்பட்டு, சுப்மான் கில் (Shubman Gill) துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இப்படி பல விஷயங்கள் இந்த தொடரை சுவாரஸ்யமாக்குகின்றன.
அந்த வகையில், டி20 தொடருக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணி வீரர்கள் நேற்று பல்லேகலே நகரில் பயிற்சி மேற்கொண்டனர். நேற்று நடந்த முதல் நாள் பயிற்சியிலேயே கௌதம் கம்பீரின் சகாக்களுக்கும், ஹர்திக் பாண்டியாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிகின்றனர். புதிய துணை பயிற்சியாளராக உள்ள அபிஷேக் நாயருக்கும் (Abisheik Nayar), ஹர்திக் பாண்டியாவுக்கும்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.
வலைப்பயிற்சி எதற்கு?
வீரர்கள் போட்டி நடைபெறும் சூழலை மனதில் வைத்து வலைப்பயிற்சியில் ஈடுபடுவதை ஒரு வாடிக்கையாக வைத்திருப்பார்கள். அதாவது, மனக்கணக்கில் ஒரு பீல்டர் ஒரு இடத்தில் பீல்டிங்கிற்கு நிற்கிறார் என வைத்துக்கொண்டு, வலைப்பயிற்சியில் வீசப்படும் பந்தை எதிர்கொள்வார். அங்கு பீல்டர்கள் இருக்க மாட்டார்கள், ஆனால் இருந்தால் அந்த ஷாட்டை எப்படி அடிக்க வேண்டும் என்பதற்காக இந்த பயிற்சி மேற்கொள்ளப்படும். அலைச்சல்களை தடுக்கவே வலைகள் பயிற்சியில் பயன்படுத்தப்படுகின்றன. இங்குதான் பாண்டியாவுக்கும், அபிஷேக் நாயருக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
என்ன பிரச்னை?
ஹர்திக் பாண்டியா பாய்ண்ட் திசையில் அடிக்க, அதனை பவுண்டரி என அவர் கூறியுள்ளார். ஆனால், அபிஷேக் நாயர் அதை பவுண்டரி இல்லை, அங்கு தான் நான் பீல்டரை வைத்திருந்தேன் என்றார். ஆனால் இதை ஒத்துக்கொள்ளாத ஹர்திக் பாண்டியா அது பவுண்டரிதான் என வாக்குவாதம் செய்தார். உடனே பிரச்னைக்கு தீர்வு காண அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவரிடம் அபிஷேக் நாயர் அது பவுண்டரியா இல்லையா என கேட்க, அந்த பத்திரிகையாளரும் அங்கு பீல்டர் நின்றிருந்தாலும் பந்து பவுண்டரிக்கு போயிருக்கும் என கூறியிருக்கிறார்.
இதைக் கேட்ட ஹர்திக் பாண்டியா மற்றும் அபிஷேக் நாயர் ஆகியோர் குபீரென சிரித்துள்ளனர். இறுதியாக ஹர்திக் பாண்டியவே அதில் வெற்றி பெற்றார். இந்திய அணி மூன்று மணிநேரம் வரை பயிற்சி மேற்கொண்டது. இதில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் மட்டுமில்லை பந்தும் வீசி பயிற்சி மேற்கொண்டார். சுமார் 40 நிமிடங்களுக்கு சுப்மான் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) ஆகியோருக்கு பந்துவீசியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ராகுல் டிராவிட் ஐபிஎல் ரிட்டர்ன்ஸ் உறுதி, கேகேஆர் இல்லை – பேச்சுவார்த்தை நடத்தும் அணி இதுதான்