சாரதி அனுமதிப்பத்திரத்தை கருப்புப் பட்டியலில் (Black List) இடும் முறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்ட மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்தார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் எதிர்வரும் வேலைத்திட்டம் மற்றும் தற்போதைய வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலகின் பிற நாடுகளில் பின்பற்றப்படும் இந்த நடைமுறைக்கமைய, சாரதி அனுமதிப்பத்திரங்களை கருப்புப் பட்டியலில் (Black List) இடுவதனூடாக, போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து, நெடுஞ்சாலையில் பயணிக்கும்; சாரதிகளிடையே ஒழுக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சாரதிகள் மற்றும் பாதசாரிகளின் கவனக்குறைவு காரணமாகவே 75மூ க்கும் அதிகமான வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பதை வலியுறுத்திய மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் கருப்புப் பட்டியல் (Black List) முறை அமுல்படுத்தப்படும் என்றும் வலியுறுத்தினார்.
இதன் மூலம், நெடுஞ்சாலைகளில் இடம்பெறுகின்ற வீதி ஒழுங்கு விதிகளை மீறுவதற்கு எதிராக பொலிஸாரினால் தண்டப்பத்திரம் வழங்கப்படும் அனைத்து சாரதிகளுக்கும் அவர்களது தவறுகளுக்கமைய கருப்புப் பட்டியலில் இடுவதற்கான புள்ளிகள் சேர்க்கப்படும் என்றும் அவர் மேலும் அறிவித்தார்.